“சாதிவாரி கணக்கெடுப்புக்கு மறுத்த பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்?” - பழனிசாமி கேள்வி

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வேலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் மருத்துவர் பசுபதிக்கு ஆதரவாக நேற்று பிரச்சாரம் செய்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமி.படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வேலூர் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் மருத்துவர் பசுபதிக்கு ஆதரவாக நேற்று பிரச்சாரம் செய்த முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான பழனிசாமி.படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
2 min read

வேலூர்: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என்ற பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்துள்ளது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நான் அரசாணை வெளியிட்டேன் என வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் பசுபதியை ஆதரித்து பள்ளிகொண்டா அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான பழனிசாமி நேற்று பேசும்போது, "இங்கு போட்டியிடும் ஒரு வேட்பாளர் அதிமுகவினரை பார்த்து துரோகம் செய்துவிட்டதாக பேசுகிறார்.

அதிமுகவினர் என்றைக்கும் உழைக்க பிறந்தவர்கள், விசுவாசிகள். எம்ஜிஆரால் அடையாளம் காணப்பட்ட நீங்கள் இன்று செல்வ செழிப்புடன் இருக்க எங்கள் தொண்டன்தான் காரணம். தொண்டன் உழைப்பால் செல்வந்தரான நீங்கள் நன்றி மறந்தவர். உங்களுக்கு நல்ல எண்ணம் இல்லை.

இங்கு போட்டியிடும் திமுக வேட்பாளரும், அமைச்சர் ஒருவரும் பெண்களை அவமானப்படுத்துகிறார்கள். 2.15 கோடி பெண்களுக்கு மாதம் ஆயிரம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு, வெறும் 70 லட்சம் பேருக்கு மட்டுமே கொடுக்கிறார்கள்.

அதிமுக ஆட்சியில் மாணவர்கள் மடியில் மடிக்கணினி விளையாடியது. இந்த திட்டத்துக்காக 7,300 கோடி ரூபாய் ஒதுக்கி 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி அறிவுப்பூர்வமாக சிந்திக்க வைத்தோம். இன்று மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்துக்கு திமுக கொண்டு சென்றுள்ளது. சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுத்தது திமுக அரசு.

‘நீட்' தேர்வு ரத்து செய்யப்படும் எனக்கூறி ஆட்சிக்கு வந்த திமுக 3 ஆண்டுகளாகியும் ரத்து செய்யவில்லை. புதைக்கப்பட்ட அந்த ரகசியத்தை எப்போது எடுப்பார்கள் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். தாலிக்கு தங்கம், இரு சக்கர வாகன திட்டம் ரத்து என அலங்கோல ஆட்சி நடக்கிறது. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு ரூ.300 கோடியில் தடுப்பணை கட்ட பூஜை போட்டும் அதை தடுக்கவில்லை.

மத்திய பாஜக அரசு தமிழக புயல், வெள்ளத்துக்கு நிதி வழங்கவில்லை. ஆனால், அவர்கள் ஆளும் உத்தரபிரதேசம், பிஹாருக்கு மட்டும் சிறப்பு நிதி ஒதுக்குகிறார்கள். தமிழ்நாட்டுக்கு மட்டும் நிதி கொடுக்க மறுக்கிறார்கள். அதனால்தான் தேசிய கட்சி யுடன் கூட்டணி வேண்டாம் என நாம் தனியாக வந்தோம். நமது உரிமையை காப்போம். இனி சிறுபான்மை மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உங்கள் பின்னால் நின்று முறியடிப்போம். நாங்கள் பாஜக கூட்டணியை முறித்ததால் உங்களுக்கு ஏன்? பயம் வருகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என கூறிய கட்சி பாஜக. அந்த கட்சியோடு பாமக எப்படி கூட்டணி வைத்தது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசாணை பிறப்பித்தது நான்தான். ஆனால், திமுக அரசு கண்டுகொள்ளாததால் காலாவதியாகிவிட்டது" என்றார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தம்பித்துரை, கே.சி.வீரமணி, அக்ரி் கிருஷ்ணமூர்த்தி, முக்கூர் சுப்பிரமணியன், நிலோபர் கபீல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in