Published : 01 Apr 2024 07:03 PM
Last Updated : 01 Apr 2024 07:03 PM
மதுரை: “கம்யூனிஸ்ட் கட்சிகங்கள் ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒரு கொள்கை வைத்துள்ளன” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சித்துள்ளார்.
மதுரை கே.கே.நகர் சுந்தரம் பூங்கா அருகே அதிமுக தேர்தல் அலுவலகத்தில் தமிழ்நாடு கம்யூனிஸ்ட் ஒர்க்கர்ஸ் பார்ட்டி தென்னிந்திய பொதுச்செயலாளர் அ.ஆனந்தன், அதிமுக பிரச்சாரத்துக்கு ஆதரவாக எழுதிய தேர்தல் பிரச்சாரப் புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அந்தப் புத்தகத்தை வெளியிட்டார். அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் பெற்றுக் கொண்டார்.
பின்னர், செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேசியது: ''மக்கள் கொடுக்கிற வரவேற்பும், ஆதரவையும் பார்க்கும்போது அதிமுக வெற்றி உறுதி செய்யப்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், எங்களுடன் போட்டியிட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஒவ்வெ்ாரு மாநிலத்துக்கும் ஒரு கொள்கை உள்ளது. கேரளாவில் ஒரு கொள்கை, திரிபுராவில் ஒரு கொள்கை, தமிழகத்தில் ஒரு கொள்கையுடன் செயல்படுகிறது.
அன்புமணி ராமதாஸ் இங்கேயும் அங்கேயும் பேரம் பேசி, எங்கு அதிக தொகுதி, தொகை கிடைக்கிறதோ அங்கு செல்லக் கூடியவர். எப்படி கருணாநிதி குடும்பம் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறதோ, அதுபோல ராமதாஸ் குடும்பமும் ஆதிக்கம் செலுத்தப் பார்க்கிறது. ராமதாஸ் பாமக தொடங்கும்போது எனது குடும்பத்தினர் யாரும் வரமாட்டார்கள், அப்படி வந்தால் என்னை சவுக்கால் அடியுங்கள் என்று சொன்னார். ஆனால், இன்று அவரது மகன் அன்புமணி ராமதாஸ் சொல்வதுதான் அந்தக் கட்சியில் நடக்கிறது.
ராமதாஸ் கடைசி வரை பாஜக கூட்டணியை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், அன்புமணி ராமதாஸ் ஒற்றைக்காலில் நின்று பாஜகவுடன் கூட்டணி அமைத்து தான் நினைத்ததை நடத்திக் காட்டியுள்ளார். அதனால், இந்தத் தேர்தலில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் பேச்சும், பிரச்சாரமும் எடுப்படாது.
அன்புமணி ராமதாஸ் மனைவி போட்டியிடும் தருமபுரி தொகுதியில் பல இடங்களில் பூத் கமிட்டியே இல்லை என்று சொல்கிறார்கள். அந்தளவுக்குதான் பாமக செல்வாக்கு இருக்கிறது. தென் தமிழகத்தில் பாமகவுக்கு கிளைகளே இல்லாத பல மாவட்டங்கள் உள்ளன. குறிப்பிட்ட மாவட்டங்களில்தான் பாமக உள்ளது'' என்று அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT