

சென்னை: "1974-ம் ஆண்டில் இரு நாடுகளிடையே நடந்த பரிமாற்றத்தை மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்?. கச்சத்தீவின் பரப்பளவு 1.9 சதுர கி்.மீ.. அதனைத் தந்து 6 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு அவர்களுக்குச் சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி." என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கச்சத்தீவு தொடர்பாக திமுக - பாஜக இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. கச்சத்தீவு தொடர்பான 1974 ஒப்பந்தம் குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெற்ற ஆர்டிஐ தகவலுக்கு பிறகு இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையாகி வருகிறது. பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது என்று கூறி விமர்சித்தார்.
இதனிடையே, கச்சத்தீவு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், "1974-ம் ஆண்டில் இரு நாடுகளிடையே நடந்த பரிமாற்றத்தை மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்?. கச்சத்தீவின் பரப்பளவு 1.9 சதுர கி்.மீ.. அதனைத் தந்து 6 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு அவர்களுக்குச் சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி.
மோடி செய்தது என்ன?. 2000 சதுர கி.மீ இந்திய பூமியை சீனா அபகரித்திருக்கிறது. "எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை" என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பை மோடி நியாயப்படுத்தினார். மோடியின் பேச்சை சீனா உலகமெங்கும் பரப்பியது.
சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது. நல்லுணர்வுடன் பரிமாற்றம் வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது வேறு” என்று அப்பதிவில் தெரிவித்துள்ளார்.