

ராமநாதபுரத்தில் பிரதமர் நரேந்திரமோடி வேட்பாளராக நிற்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், என்னை வேட்பாளராக பிரதமர் நிறுத்தி உள்ளார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். ராமநாதபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சுயேச்சை சின்னத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
பரமக்குடியில் நேற்று கூட்டணிக் கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியில் பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மட்டும்தான் இடம் பெற்றிருக்கின்றன.
ஆனால் தொண்டர்களுடைய உரிமைகளை மீட்கக் கூடிய என்னை, பதிவுபெற்ற கட்சிகளுக்குச் சமமாக இணைத்துக் கொண்டார்கள். மேலும், ராமநாதபுரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பிரதமர்தான் நிற்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், என்னை வேட்பாளராக பிரதமர் நிறுத்தி உள்ளார்.
உலகின் பல்வேறு நாடுகளில் பிரதமர் மோடியின் நிர்வாகத் திறனைப் பாராட்டி உள்ளனர். அவர் மீண்டும் பிரதமராக வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு மாவட்டச் செயலாளர் தர்மர், ஓ.பி.ரவீந்திரநாத் எம்பி, பாஜக மாவட்ட தலைவர் தரணி முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.