

தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து பாமக தலைவர் அன்புமணி சோழிங்கநல்லூரில் நேற்று மாலை பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து, மத்திய சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்தை ஆதரித்து வில்லிவாக்கத்திலும் வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜை ஆதரித்து கொளத்தூரிலும் அன்புமணி வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தின்போது அன்புமணி பேசியதாவது: சென்னை என்று சொன்னாலே டிசம்பர் மாதம் நினைவுக்கு வந்துவிடும். டிசம்பர் மாதம் வந்தாலே எப்படா வெள்ளம் வரும் என்ற பயம் வந்துவிடும். மழை என்பது நமக்கு இயற்கையின் வரம். அப்படியான மழையை பார்த்து, நமக்கு பயம் வர வைத்துவிட்டன, ஆட்சி செய்த 2 கட்சிகளும்.
காங்கிரஸ் ஆட்சி செய்த 60 ஆண்டுகளில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என்று சொல்லவில்லை. கடந்த ஆண்டு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என ராகுல்காந்தி சொல்கிறார். மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் தேர்தலுக்காக அவர் சொல்கிறார். நிச்சயமாக பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசி சாதிவாரி கணக்கெடுப்பை ராமதாஸ் எடுக்க வைப்பார்.
திமுக ஆட்சிக்கு வரும் முன்பு நகைக்கடன், கல்விக்கடன், விவசாயக்கடன் தள்ளுபடி செய்வோம் என்றார்கள். ஆனால், தள்ளுபடி செய்யவில்லை. ஆட்சிக்கு வந்தால் ஒரே வாரத்தில் நீட்டை ஒழிப்போம், மாதம் மாதம் மின் கணக்கை எடுப்போம் என்றார்கள்.
எதையும் செய்யவில்லை. மின் கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்திவிட்டார்கள். தமிழகத்தில் மட்டும் தான் தாய் மொழி தமிழ் படிக்காமலே, பேசாமலே பட்டம் வாங்கலாம் என்ற அவல நிலை இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.