Published : 12 Apr 2018 09:36 AM
Last Updated : 12 Apr 2018 09:36 AM

கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை நீட்டிப்பு: உயர் நீதிமன்றத்தில் இன்றும் விசாரணை தொடர்கிறது

தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கின் விசாரணை உயர் நீதிமன்ற கிளையில் இன்றும் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதி திமுக எம்எல்ஏ சக்கரபாணி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள், முதல் 2 கட்ட தேர்தல் முடிந்த கூட்டுறவு சங்கங்களில் தலைவர், துணைத் தலைவர் தேர்வு நடத்தவும், 3, 4, 5 கட்ட தேர்தல் நடத்தவும் தடை விதித்து உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த மனுவும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரி தாக்கலான 50-க்கும் மேற்பட்ட மனுக்களும் நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பி.பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்தார்.

தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயணன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த்பாண்டியன் ஆகியோர் வாதிடும்போது, “கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய நிலையில் தேர்தல் தொடர்பான புகார்களை தேர்தல் ஆணையரிடம்தான் வழங்க முடியும். தேர்தல் முடிந்த பிறகே நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.

முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட தேர்தலுக்கு நீதிமன்றம் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே ஒரு வழக்கில் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ள திமுக எம்எல்ஏ.க்கும் கூட்டுறவு சங்க தேர்தலுக்கும் தொடர்பு இல்லை. அவர் கூட்டு றவு சங்க தேர்தலில் பங்கேற்கவில்லை. எனவே மனுவை தள்ளு படி செய்ய வேண்டும்” என்றனர்.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் வீராகதிரவன், அஜ்மல்கான் ஆகியோர் வாதிடும்போது, “இதுவரை 9,242 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 7,699 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், பெரும்பாலானோர் ஆளும்கட்சியைச் சேர்ந்தவர்கள்” என்றனர்.

கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுந்தரேசன் வாதிடும்போது, “18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. தேர்தலுக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கு தொடர்ந்துள்ளனர். இதற்காக தேர்தலை நிறுத்துவது சரியல்ல. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையின்படி தேர்தல் நடத்த அனுமதிக்க வேண்டும்” என்றார்.

பின்னர், தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் விவரம், வேட்புமனு தாக்கல் செய்தவர்கள், வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

இதற்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் வழக்கறிஞர் மறுப்பு தெரிவித்தார். மேலும் இடைக்கால உத்தரவை நீக்கி தேர்தல் நடத்த அனுமதி வழங்கி, போதிய அவகாசம் வழங்கினால் தேர்தல் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்கிறோம் என்றார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கூட்டுறவு சங்க தேர்தல் வழக்கில் முடிவெடுக்க தேர்தல் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றம் ஆய்வு செய்ய விரும்புகிறது. இதற்காக பட்டியல் தாக்கல் செய்ய வேண்டும் என 3 நாட்களுக்கு முன்பு உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுவரை பட்டியல் தாக்கல் செய்யவில்லை. நீதிமன்றத்துக்கு உதவி செய்ய மறுப்பது சரியல்ல என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பின்னர் விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், கூட்டுறவு சங்க தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டித் தும் (தற்போதைய நிலை தொடர வேண்டும்) உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x