Published : 08 Apr 2018 09:14 AM
Last Updated : 08 Apr 2018 09:14 AM

தமிழக அரசு தொடர்ந்த அவமதிப்பு வழக்கு நாளை விசாரணை: சட்ட நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை; உச்ச நீதிமன்றத்தில் உறுதியான வாதங்களை எடுத்து வைக்க வழக்கறிஞர்களுக்கு அறிவுரை

காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. இந்த விசாரணையின்போது தமிழகத்தின் தரப்பில் எடுத்து வைக்க வேண்டிய வாதங்கள் குறித்து மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே தலைமையிலான சட்ட நிபுணர்களுடன் முதல்வர் கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பின்படி, 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை மத்திய அரசு அமைக்கவில்லை. வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், எதற்கும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இதனால், மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் தொடங்கின. அரசியல் கட்சியினரும் பல்வேறு அமைப்புகளும் கடந்த 1-ம் தேதி முதல் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

குறிப்பிட்ட கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காததால் மத்திய அரசுக்கு எதிராக மார்ச் 31-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அதே நேரத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்ட ‘ஸ்கீம்’ என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரியும் தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் கோரியும் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், ஏப்ரல் 9-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசு சார்பிலும் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கும் இதனுடன் இணைத்து விசாரிக்கப்படுகிறது.

வலுக்கும் போராட்டங்கள்

இதற்கிடையே, தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அதிமுக சார்பில் உண்ணாவிரதம், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு மற்றும் காவிரி உரிமை மீட்பு பயணம், ரயில், சாலை மறியல்கள் என மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதனால், தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, முன்னாள் முதல்வர் தேவகவுடா ஆகியோர் தமிழகத்தின் நிர்பந்தத்துக்கு மத்திய அரசு பணிய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நாளை விசாரணை

இந்நிலையில், தமிழக அரசு தொடர்ந்த அவமதிப்பு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. இந்த விசாரணையின்போது, தமிழகம் தனது நிலைப்பாட்டை தெளிவாக எடுத்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆலோசிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்காக தொடர்ந்து வாதாடி வரும் மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, வழக்கறிஞர்கள் சுப்பிரமணியன் பிரசாத், உமாபதி, பரமசிவம், விஜயகுமார் ஆகியோர் நேற்று சென்னை வந்தனர்.

தலைமைச் செயலகத்தில் முதல்வரை அவர்கள் சந்தித்தனர். அப்போது வழக்கு தொடர் பாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், தலை மைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித் துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், சட்டத் துறை செயலாளர் பூவலிங்கம், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் அடிப்படையிலேயே உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதால், ‘ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையை குறிக்கும் என்ற உறுதி யான வாதத்தை உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும். தமிழகத்தில் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருவதையும் பயிர்களுக்கு தேவையான தண் ணீர் கிடைக்கவில்லை என்பதையும் எடுத்துக்கூறி, உரிய உத்தரவை பெற வேண்டும் என்று வழக்கறிஞர்களுக்கு முதல்வர், துணை முதல்வர் தரப்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, சேகர் நாப் தே உள்ளிட்ட வழக்கறிஞர்களும் ஆலோசனைகளை தெரிவித்து, அதற்கான சான்றாவணங்களை யும் பெற்றுக் கொண்டனர். இந்த ஆலோசனைக் கூட்டம் மாலை 4 மணிக்கு தொடங்கி 4.45-க்கு முடிந்தது. கூட்டத்தில், தமிழகத் தின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்துரைத்து, சாதகமான தீர்ப் பை பெற வேண்டும் என வழக்கறிஞர்களிடம் முதல்வர் அறிவுறுத்தியதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x