Published : 01 Apr 2024 05:49 AM
Last Updated : 01 Apr 2024 05:49 AM

“ஒற்றுமையால் மட்டுமே மோடியை வீழ்த்த முடியும்” - டெல்லி ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரை வாசிப்பு

‘‘இண்டியா கூட்டணியின் ஒற்றுமையால் மட்டுமே மோடியை வீழ்த்தமுடியும்’’ என்று டெல்லியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா வாசித்த உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அர்விந்த்கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து, டெல்லி ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்,திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில், திருச்சி சிவா எம்.பி. பங்கேற்றார். அப்போதுமுதல்வர் மு.க.ஸ்டாலின் உரையை அவர் வாசித்தார்.

அந்த உரையில் கூறியிருந்ததாவது: டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைதுக்கு என் சார்பிலும், திமுக சார்பிலும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தனக்கு எதிராக இண்டியா என்ற வலிமையான கூட்டணியை எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து அமைத்தது முதல் நிலைகொள்ளாமல் தவறுகளுக்கு மேல் தவறுகளைச் செய்து வருகிறது பாஜக தலைமை.

இண்டியா கூட்டணித் தலைவர்கள் அனைவரையும் ஏதோ இந்த நாட்டின் எதிரிகளைப் போல நடத்தத் தொடங்கியது. பாஜக அல்லாத மாநிலங்களை ஆளும் அரசுகளை, மிகமோசமாக நடத்தினர். ஆட்சிகளைக் கவிழ்ப்பது, கூட்டணிகளை உடைப்பது, எம்எல்ஏக்களை இழுப்பது என அனைத்து இழிவான செயல்களையும் செய்தனர்.

மிரட்டல்: அதன்பின் சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத் துறைஆகியவை மூலம் மிரட்டுகின்றனர். இதில் மிரண்டு பாஜகவில் ஐக்கியம் ஆனவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. வழக்குகளே திரும்பப் பெறப்படும். ஆனால் பாஜகவின் ஆணவங்களுக்கு அடங்காதவர்களாக இருந்தால் அவர்களை கைது செய்து சிறையில் அடைப்பார்கள். இது இந்தியாவில் அறிவிக்கப்படாத அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்டதைப் போல இருக்கிறது.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த்சோரனை தொடர்ந்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கைதாகியுள்ளார். இருவரும் இண்டியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள். இந்த கைது மூலம்இண்டியா கூட்டணியை குலைத்துவிட முடியாது.

கூட்டணி தலைவர்களுக்கு குறி: நாளுக்கு நாள் பாஜக தோல்வியை நோக்கி வேகமாக பயணித்துவருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம், பொது சிவில் சட்டம், ராமர் கோயில் என எதுவும் கைகொடுக்கவில்லை. அதனால் தான்இண்டியா கூட்டணித் தலைவர்களைக் குறி வைக்கிறார்கள்.

அர்விந்த் கேஜ்ரிவால் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதை தடுக்கும் முயற்சியாகவே அவரைக் கைது செய்துள்ளார் பிரதமர் மோடி. ஆனால், இளைஞர்கள் மத்தியில் இந்தக் கைது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறப் போகிறவர், எதற்காக இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று மோடியின் ஆதரவாளர்களே அவரை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இந்த கைது மூலம் இண்டியா கூட்டணி தலைவர்களை மிரட்டநினைத்தால் பிரதமர் மோடி ஏமாந்து போவார். ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் இதன்மூலமாக சோர்வடைந்து விடமாட்டார்கள். இந்தச் சூழலில் ஆம் ஆத்மி கட்சிக்கு திமுக துணை நிற்கிறது.

இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் உறுதியுடன் தங்கள் போராட்டத்தை தொடர வேண்டும். மோடி ஆட்சி மீண்டும் வந்தால் இப்போது இருக்கும் இந்தியாவின் ஜனநாயக அரசியலமைப்புச் சட்டப்பண்புகள் வேரோடு சாய்க்கப்படும்.

இண்டியா கூட்டணியின் ஒற்றுமையால் மட்டுமே மோடியை வீழ்த்த முடியும். மக்கள் அளிக்கும் வாக்குகள் மட்டும்தான் பாஜகவின் பாசிச ஆட்சிக்கு முடிவுரை எழுத முடியும். அர்விந்த் கேஜ்ரிவால் விரைவில் வெளியில் வருவார். பாசிச பாஜகவை வீழ்த்த தமிழக மக்கள் தயாராகி விட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x