

சென்னை: மொபைல் செயலியில் புதிய மின்இணைப்புக்கு ஒப்புதல் அளிப்பது, மின்விநியோகம் துண்டிக்கப்பட்ட இணைப்புகளை கண்டறிவது உள்ளிட்ட சோதனை திட்டம் வெற்றி பெற்றுள்ளதால், மாநிலம் முழுவதும் அமல்படுத்த மின்வாரியம் முடிவு செய்துள்ளது.
தமிழக மின்வாரியம் வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவுமின்இணைப்புகளில் மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க களப் பிரிவு ஊழியர்களுக்கு மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி ஊழியர்களின் மொபைல் போனில்பதிவிறக்கம் செய்து தரப்பட்டுள்ளது.
அதில், மீட்டரில் பதிவாகியுள்ள மின்பயன்பாடு கணக்குஎடுக்கப்படுகிறது. இதனால், கட்டண விபரம் நுகர்வோருக்கு உடனே அனுப்பப்படுகிறது. மேலும், மொபைல் செயலியில் கூடுதல் சேவையாக மின்விநியோகம் துண்டிக்கப்பட்ட மற்றும் மீண்டும் வழங்கப்பட்ட இணைப்புகளை உடனுக்குடன் கண்டறிவது, புதிய மின்இணைப்புக்கு ஒப்புதல் வழங்குவது, குறைபாடு உடைய மீட்டருக்குப் பதில் புதிதாக மீட்டர் மாற்ற ஒப்புதல் தருவது உள்ளிட்ட கூடுதல் சேவைகள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
12 மண்டல அலுவலகங்கள்: இத்திட்டம் சோதனை அடிப்படையில் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள 12 மண்டலஅலுவலகங்களில் தலா ஒரு பிரிவுஅலுவலகத்தில் கடந்த ஜனவரிமாதம் செயல்படுத்தப்பட்டது. இச்சோதனை வெற்றி பெற்றுள்ளதால், மாநிலம் முழுவதும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது , ‘‘மொபைல் செயலியில் மின்கட்டணம் செலுத்தாமல் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு பின் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்ட இணைப்புகளை உடனுக்குடன் அறிய முடிகிறது. புதிய மின்இணைப்புக்கு ஒதுக்கப்படும் மீட்டர் எண்களும் உடனேபதிவு செய்து ஒப்புதல் தரப் படுகிறது. இதனால், அலுவலகத்துக்கு வந்து கணினியைப் பார்த்து ஒப்புதல் அளிக்கும் நேரம் குறைகிறது' என்றனர்.