Published : 16 Apr 2018 03:08 PM
Last Updated : 16 Apr 2018 03:08 PM

சென்னையைச் சேர்ந்த பிரபல கூலிப்படை தலைவன் கைது

சென்னையைச் சேர்ந்த பிரபல கூலிப்படைத்தலைவன் பாம் சரவணன் என்பவர் திருவள்ளூரில் கைது செய்யப்பட்டார்

புளியந்தோப்பு, வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன் என்ற பாம் சரவணன். பிரபல ரவுடி தென்னரசுவின் சகோதரர். இவரது தம்பி தென்னரசு கடந்த 2015-ம் ஆண்டு தாமரைப்பாக்கம் கூட்ரோடு அருகே கொலை செய்யப்பட்டார்.

சென்னையைக் கலக்கிய பிரபல தாதா காது குத்து ரவி, குன்றத்தூர் வைரம், காக்கு வீரன் போன்றோரின் நெருங்கிய கூட்டாளி. கொலை மற்றும் கொலை முயற்சிகளின் போது பாம் (வெடிகுண்டு) வீசுவதில் கைதேர்ந்தவர் என்பதால் பாம் சரவணன் என்று ரவுடிகள் வட்டாரத்தில் அழைக்கப்பட்டு அதுவே பட்டப்பெயரானது.

மேலும் கடந்த 1998-ம் ஆண்டு திருவிக நகர் காவல் நிலையத்தில் சின்னக் குட்டி என்பவரைக் கொலை செய்த வழக்கும், 2001-ம் ஆண்டு பெரியமேடு காவல் நிலையத்தில் ஐரீஸ் என்பவரை கொலை செய்த வழக்கும், 2002-ம் ஆண்டு அயனாவரம் காவல் நிலையத்தில் கதிரவன் என்பவரைக் கொலை செய்த வழக்கும், 2011-ல் நீலாங்கரை காவல் நிலையத்தில் பிரபல ரவுடி வெள்ளை உமா என்பவரை கொலை செய்த வழக்கு மற்றும் 2013-ல் கே.கே. நகர் காவல் நிலையத்தில் கதிரவன் என்பவரைக் கொலை செய்த வழக்கு என 5 கொலை வழக்குகள் சரவணன் மீது உள்ளன.

மேலும் எட்டு காவல் நிலையங்களில், வெடிகுண்டு வீச்சு, கட்டப் பஞ்சாயத்து, அடிதடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தொடர் குற்றங்களை கட்டுப்படுத்தும் விதமாக இதுவரை 5 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சரவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நீதிமன்றங்களில் நடக்கும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தபடியே ஆட் கடத்தல், தொழிலதிபர்களைப் பணம் கேட்டு மிரட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டார். புகார்கள் அதிகமாக வந்ததை அடுத்து போலீஸார் அவரைத் தேடி வந்தனர். இந்த நிலையில் திருவள்ளூரில் மறைந்திருந்த பாம் சரவணனை புளியந்தோப்பு தனிப்படை போலீஸார் இன்று காலையில் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x