Published : 01 Apr 2024 06:05 AM
Last Updated : 01 Apr 2024 06:05 AM

வில்லிவாக்கத்தில் 4-வது ரயில் முனையம் உருவாக்க இரண்டு பணிமனைகளை இடம் மாற்ற திட்டம்

சென்னை: சென்னைக்கான நான்காவது ரயில் முனையத்தை வில்லிவாக்கத்தில் உருவாக்க, பெரம்பூர் கேரஜ் மற்றும் லோகோ ஒர்க்ஸை படிப்படியாக இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் நெரிசலைக் குறைக்க புதிய முனையம் அமைக்கும் யோசனை கடந்த 2008-ம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது. இருப்பினும், இட நெருக்கடி மற்றும் செயல்பாட்டுச் சிக்கல்கள் போன்ற காரணங்களால், அது நிறைவேறவில்லை.

இதையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சால்ட் கோட்டர்ஸில் உள்ள இடத்தை பயன்படுத்த ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின் முடிவில், அந்த சாத்திய தளமும் நிராகரிக்கப்பட்டது.

தொடர்ந்து, வில்லிவாக்கத்தில் 4-வது ரயில் முனையம் அமைக்க முன்மொழியப்பட்டது. மேலும், இதை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் சில மாதங்களுக்கு முன்பு உறுதி செய்தார். அப்போது, அவர், வில்லிவாக்கத்தில் 4-வது ரயில் முனையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதுதொடர்பாக ஆய்வு நடைபெறுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலையில், வில்லிவாக்கம் ரயில் முனையம் உருவாக்க, 200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெரம்பூர் கேரஜ் மற்றும் லோகோ பணிமனைகளை படிப்படியாக இடம் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், நான்காவது ரயில் முனையத்தை உருவாக்குவதற்கு வசதியாக, ஐசிஎஃப் மற்றும் இரண்டு பணிமனைகளில் இருந்து நிலத்தை மாற்றுமாறு ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை (ஐசிஎஃப்) மற்றும் மெக்கானிக்கல் துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் நிறைவேறினால், வில்லிவாக்கம் ரயில் முனையம் பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம் மற்றும் ரேணிகுண்டா செல்லும் ரயில்களுக்கு சேவை வழங்கும். இந்த ரயில்கள் தற்போது சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படுகின்றன.

இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, "முன்மொழிவு இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது. இருப்பினும், பெரம்பூர் மற்றும் வில்லிவாக்கத்தில் ரயில்வே நிலம் கிடைப்பது நம்பிக்கை அளிக்கிறது. கேரஜ் மற்றும் லோகோ பணிமனையில் செயல்பாடுகள் படிப்படியாக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x