

சென்னை: தேர்தல் நடத்தை விதிமீறலில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சிபிரமுகர் மீது குமரன் நகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். மக்களவை தேர்தலை முன்னிட்டு தென்சென்னை தொகுதிக்கு உட்பட்ட மேற்கு மாம்பலம் ரெட்டி குப்பம் சாலையில் நாம்தமிழர் கட்சியின் தேர்தல் பிரச்சாரபொதுக்கூட்டம் நேற்று முன்தினம்நடைபெற்றது.
அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறி, சாலையில் இரு பக்கங்களிலும் பள்ளம் தோண்டி கொடிக்கம்பங்களை நட்டு பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக பறக்கும் படை அதிகாரி கார்த்திகேயன் குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்படி, போலீஸார் சம்பவ இடம் விரைந்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, புகார் உண்மையென தெரியவந்ததால், குமரன் நகர் போலீஸார், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த நாம் தமிழர் கட்சி சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற குழு நிர்வாகி சுகுமாரன்மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்தனர்.