தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக முயன்றவர்களுக்கு நன்றி: சு.திருநாவுக்கரசர் உருக்கம்

தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போக முயன்றவர்களுக்கு நன்றி: சு.திருநாவுக்கரசர் உருக்கம்
Updated on
1 min read

சென்னை: தேர்தலில் போட்டியிட எனக்குவாய்ப்பு கிடைக்காமல் போகமுயன்றவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் காங்கிரஸ்- திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிட்டேன். அந்த தேர்தலில் 10 லட்சத்து 48 ஆயிரம் வாக்குகள் பதிவானது. 6 லட்சத்து 29ஆயிரம் வாக்குகள் (60 சதவீதம்) எனக்கு மட்டும் அளித்து 4 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தனர். அம்மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மக்கள் நலப்பணிகள்: 5 ஆண்டுகளில் கரோனா பரவல்காலமான ஒன்றரை ஆண்டுகள்நீங்கலாக, தொகுதி வளர்ச்சி நிதியில் ரூ.17 கோடியில் 288 மக்கள் நலப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

இத்தொகுதியில் நான் சுற்றுப்பயணம் செய்யும்போது, சாதி, மதஎல்லைகளை கடந்து அனைத்து தரப்பினரும் என் மீது காட்டிய பாசமும், அன்பும் என் உள்ளம் முழுவதும் நிறைந்து பசுமையாய் நிலைத்து நினைவில் இருக்கும்.

அரசியல் செயல்பாடு தொடரும்: இத்தொகுதியில் தொடர்ந்து எம்.பி.யாக பணியாற்ற வாய்ப்புகிடைக்காவிட்டாலும், இத்தொகுதிமக்களுக்காக எனது பணி தொடரும். திருச்சியை 2-வது தலைநகராக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். திருச்சியை மையமாக கொண்டு எனது அரசியல் செயல்பாடுகள் தொடர்ந்து இருக்கும். மக்கள் எப்போதும் போல திருச்சி அலுவலகத்தில் என்னை சந்திக்கலாம்.

சுமார் 47 ஆண்டுகளாக எனக்குள்ள மத்திய, மாநில அரசுகளின் தொடர்பு, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் முடிந்த நன்மைகளை திருச்சி தொகுதி மக்களுக்கு தொடர்ந்து செய்வேன்.

எம்ஜிஆரால் 1977-ம் ஆண்டுநான் எம்எல்ஏ ஆன காலம்தொட்டு, பொறுப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியாற்றுவதில் இருந்து ஓய்வுபெற்றதே இல்லை. என் வாழ்நாளில் என் இல்லத்தில் இருந்த நாட்களை காட்டிலும், மக்களோடு நான் இருந்த நாட்களே அதிகம்.

நான் திருச்சி எம்.பி.யாக செயல்பட்டபோது உதவிய அலுவலர்கள், திமுக, காங்கிரஸ் உள்ளிட்டகூட்டணி கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இத்தேர்தலில் நான் மீண்டும் போட்டியிட விரும்பியவர்களுக்கும், என் வாய்ப்புக்காக உதவிட முயன்றவர்களுக்கும், எம்.பி.யாகநான் தொடர கூடாதென இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போக முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in