Published : 01 Apr 2024 04:06 AM
Last Updated : 01 Apr 2024 04:06 AM

“10 ஆண்டுகளாக காமராஜர் ஆட்சிதான் நடக்கிறது” - பாஜக வேட்பாளர் ராதிகா

விருதுநகரில் நடைபெற்ற பாஜக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா.

விருதுநகர்: கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் காமராஜர் ஆட்சிதான் நடக்கிறது. தமிழக மக்களுக்கு ஏன் இது தெரிய வில்லை என்று பாஜக வேட்பாளர் ராதிகா கேள்வி எழுப்பினார்.

விருதுநகரில் பாஜக செயல்வீரர்கள் கூட்டம், மாவட்டத் தலைவர் பாண்டு ரங்கன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா பேசியதாவது: ஊழல் இல்லாத, மாற்றம் கொண்டு வருவதற்கான கட்சிதான் பாஜக. அதனால் தான் சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தோம். 10 ஆண்டுகளாக ஊழல் இல்லாமல் சிறப்பாகச் செயல்பட்ட கட்சி பாஜக. மோடி இந்தியாவை வேற `லெவலுக்கு' எடுத்துச் சென்றுள்ளார்.

விருதுநகரில் எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தும் அதைப் பற்றி பேசாமல் விருதுநகர் எம்.பி. அண்ணாமலையைப் பற்றி மட்டும் தான் பேசுகிறார். 40 தொகுதிகளையும் பாஜக வெல்லும். நாம் ஜெயித்து விடுவோம் என்ற மிதப்பில் மட்டும் இருந்து விடாமல், கடைசி வாக்கு விழும் வரை சிறப்பாகச் செயல்பட வேண்டும். காமராஜர் ஆட்சி வர வேண்டும் என்கிறார்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக காமராஜர் ஆட்சி வந்துவிட்டது மக்களுக்குத் தெரியவில்லை.

சரத் குமாரும் நானும் இரட்டைக் குழல் துப்பாக்கி போன்றவர்கள். தமிழகம் முழுவதும் பிரச்சாரத்துக்காக அவரை அழைக்கிறார்கள். ஆனால், எனக்காக அவர் இங்கேயே இருக்கிறார். பாஜக வினரும், கூட்டணிக் கட்சியினரும் எனக்கு பக்க பலமாக இருக்கிறார்கள். இந்தக் களத்தில் வெற்றி பெற்று மோடியின் கரத்தை வலுப்படுத்துவோம், என்று கூறினார். இக்கூட்டத்தில், நடிகர் சரத்குமார், பாஜக நிர்வாகிகள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x