Published : 01 Apr 2024 04:10 AM
Last Updated : 01 Apr 2024 04:10 AM
காரைக்குடி: சிவகங்கையில் தந்தையும், மகனும் பதவியிலிருந்து சாதித்தது என்ன? என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
சிவகங்கை மக்களவைத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசியை ஆதரித்து காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: இந்தி மொழிக்கு எதிர்ப்புத் தெரிவித்த திமுக, இந்தியை திணித்த காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் மொழிப் போராட்டத்தில் உயிரிழந்த 100-க்கும் மேற்பட்டோரின் தியாகம் பயனற்றுப் போய் விட்டது. தற்போது எங்கும் இந்தி, எதிலும் இந்தி என்று வந்துவிட்டது.
அரசியல் லாபத்துக்காக கூட்டணி வைத்ததால் திமுகவின் கொள்கையும் இறந்து விட்டது; மொழியும் இறந்து விட்டது. லட்சக் கணக்கான ஈழத் தமிழர்களை கொன்று குவித்தனர். கத்தினோம், கதறினோம். செவியை மூடிக் கொண்டனர். அதையும் மறந்து விட்டு அவர்களை மீண்டும் பதவிக்குக் கொண்டு வந்தோம். அதனால் நம்மை மானங்கெட்ட தமிழ் இனம் என வரலாற்றில் பதிவு செய்தனர். ஒரு சொட்டு தண்ணீர் கூட தர முடியாது என கர்நாடக காங்கிரஸார் கூறுகின்றனர். கர்நாடகம் சென்று அவர்கள் வெற்றிக்குப் பாடுபட்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சிவகங்கை அரண்மனை வாசலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். ஆனால், நாம் தண்ணீர் கேட்டபோது முதல்வர் உருவபொம்மையை செருப்பால் அடித்தனர். பாடை கட்டி தூக்கினர். அப்போது முதல்வருக்காக குரல் கொடுத்தவன் நான்தான். ஒரு சொட்டு தண்ணீர் தராத காங்கிரஸுக்கு ஒரு வாக்கு கூட அளிக்கக் கூடாது. நெய்வேலியில் பழுப்பு நிலக்கரியில் தயாரிக்கும் மின்சாரம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தயாரிக்கும் மின்சாரத்தை அனைத்து மாநிலங்களுக்கும் பிரித்து கொடுக்கின்றனர்.
ஆனால் நீர் வளத்தை அந்தந்த மாநிலங்களுக்கே சொந்தம் என்கின்றனர். நாட்டில் விலைவாசி உயர்வு உள்ளிட்ட எந்த பிரச்சினையை பற்றி கேட்டாலும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற ஒரே மந்திரத்தைக் கூறுகின்றனர். கடவுள் ராமரை பாஜகவின் சொத்தாக ஆக்கிவிட்டனர். காங்கிரஸ் தமிழ் இனத்தின் எதிரி; பாஜக மனித குலத்தின் எதிரி. ப.சிதம்பரம் மத்தியில் பல்வேறு துறை அமைச்சராக இருந்துள்ளார். அவரது மகனும் எம்பியாக இருந்துள்ளார்.
இதுவரை சிவகங்கை தொகுதிக்கு வராத மாறுதல் இனியும் வந்துவிடும் என்றால், உங்களுக்கு நான் எப்படி ஆறுதல் கூற முடியும் என்று தெரிய வில்லை. கருணாநிதி மகன் என்பதைத் தவிர மு.க.ஸ்டாலினுக்கும், மு.க.ஸ்டாலின் மகன் என்பதைத்தவிர உதயநிதிக்கும் வேறு என்ன தகுதி இருக்கிறது? அதிமுக கட்சியை பழனிசாமி ஆரம்பித்திருந்தால் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேராவது சேர்ந்திருப்பார்களா ? எம்.ஜி.ஆர் என்ற புகழ் பெற்ற திரைப்பட கலைஞர் ஆரம்பித்து, அதன் பின்னர் ஜெயலலிதா வளர்த்து எடுத்த அதிமுக கட்சி, சின்னம், கொடி பழனிசாமிக்கு வந்ததால், அவர் தலைவர் போன்று தோற்றமளிக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT