

தேனி: அதிமுகவை மீட்கும் சட்ட நடவடிக்கையில் இருப்பதால் சசிகலா தேர்தல் பிரசாரத்துக்கு வரமாட்டார் என டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
தேனி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரன், மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: ஜெயலலிதா மறைந்த பின்பு பழனிசாமியும், முன்னாள் அமைச்சர்களும் கொள்ளையடித்தனர். ஊழல் செய்தனர். செந்தில் பாலாஜி அவரது தம்பி அசோக் ஊழல் செய்கின்றனர் என குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், அமமுகவை விட்டு திமுகவில் இணைந்தபோது, ஊழல் பற்றி எதுவும் பேசவில்லை. இப்போது சிறையில் இருக்கிறார்.
அவர் வாயைத் திறந்தால் பலர் சிறைக்கு செல்ல நேரிடும். பிரதமராக மோடி மீண்டும் வருவார். நீங்கள் கேட்கும் அனைத்தையும் மோடியிடம் கேட்டு செய்து தருவேன் என்று பேசினார். அப்போது டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என பெண்கள் கூறியபோது, வெறுங்கையால் முழம் போட முடியாது. என்னை வெற்றிபெற வையுங்கள் எல்லாம் செய்து தருகிறேன் என்றார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவை ஜனநாயக ரீதியாக மட்டுமே மீட்க முடியும். அதனை நானும், பன்னீர் செல்வமும் இணைந்து செய்வோம். அதிமுகவை மீட்கும் சட்ட நடவடிக்கையில் இருப்பதால் சசிகலா தேர்தல் பிரச்சாரத்துக்கு வரமாட்டார் என்று கூறினார்.