

திருப்புவனம்: தவம் இருந்தால் சிவனைக்கூட நேரில் பார்த்துவிடலாம். கார்த்தி சிதம்பரத்தை பார்க்க முடியாது என நடிகை விந்தியா பேசினார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காளையார் கோவிலில் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸை ஆதரித்து அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும், நடிகையுமான விந்தியா பிரச்சாரம் செய்தார். அப்போது, அவர் பேசியதாவது: கார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸில் இருப்பவர்களுக்கே பிடிக்காது. மோடியைப் பெருமையாகப் பேசிய கார்த்தி சிதம்பரம் பாஜகவுக்காகத் தான் சீட் வாங்கியுள்ளார். அவருக்கு வாக்களிப்பது, ராகுல் காந்தியை முதுகில் குத்துவது போன்றது.
கார்த்தி சிதம்பரமும், அவரது தந்தையும் சிவகங்கை தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை. தவம் இருந்தால் காளையார்கோவில் சிவனைக்கூடப் பார்த்து விடலாம். ஆனால், கார்த்தி சிதம்பரத்தை நேரில் பார்க்க முடியாது. திமுக, காங்கிரஸுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை. குடும்ப வாரிசுகளை மட்டும் யோசிப்பாங்க. திமுக கூட்டணி போல்தான் பாஜக கூட்டணியும் ஆபத்தானது. திமுக கூட்டணி தேறாது. இவ்வாறு அவர் பேசினார்.