Published : 01 Apr 2024 04:16 AM
Last Updated : 01 Apr 2024 04:16 AM

ராணிப்பேட்டை - வாலாஜா அருகே தேர்தலை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவிப்பு

ராணிப்பேட்டை அடுத்த மணியம்பட்டு கிராமத்தில் தொகுப்பு வீடுகள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து மக்களவை தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்துள்ள பொதுமக்கள்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டு மணியம்பட்டு ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் அரசு சார்பில் 35 ஆண்டு களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்குத் தொகுப்பு வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளன.

இந்த தொகுப்பு வீடுகள் உள்ள பகுதியில் பல ஆண்டுகளாகச் சாலை, கழிவு நீர் கால்வாய் மற்றும் தெருவிளக்கு என எந்தவொரு அடிப்படை வசதிகளையும் ஊராட்சி நிர்வாகம் செய்து தர வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கிராம சபை கூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் வரை சென்று அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தி பலமுறை மனுக்கள் கொடுத்தும், கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இது குறித்து மணியம்பட்டு தொகுப்பு வீடு பகுதி மக்கள் கூறும் போது, ‘‘இப்பகுதியில் வசிக்கும் நாங்கள் நவ்லாக் ஊராட்சிக்கு வரி செலுத்து கிறோம். ஆனால், வாக்குரிமை மணியம்பட்டு ஊராட்சி பகுதியில் உள்ளது. இந்த இருவேறு ஊராட்சிகளுக்கு இடையே நாங்கள் சிக்கிக் கொண்டு தவித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை யார் செய்து கொடுப்பது என்பதில் இரண்டு ஊராட்சிகளுக்கும் இடையே குழப்பம் உள்ளது.

அதனால், எங்களுக்கு வேண்டிய எந்தவொரு தேவை யையும் செய்து கொடுக்க இரண்டு ஊராட்சி அதிகாரிகளும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. எங்கள் கோரிக்கை மனுக்களுக்கு உரிய பதில் தெரிவிப்பதும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதிக்கான அடிப் படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வருவாய்த் துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இதனால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால், அந்தக் குழுவினரும் வழக்கம் போல் எங்கள் பகுதிக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை.

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம். அதனால் எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப் படுகிறது. இனியாவது அதிகாரிகள் எங்கள் கோரிக்கையை நிறை வேற்ற முன்வர வேண்டும் என்பதால் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக முடிவு செய்து வீடுகளில் கருப்புக் கொடி கட்டியுள்ளதோடு, தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்துள்ளோம்’’ என்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x