Published : 01 Apr 2024 04:16 AM
Last Updated : 01 Apr 2024 04:16 AM
திருவண்ணாமலை: பறக்கும் படை அதிகாரிகள் சோதனையின் போது வியாபாரிகளிடம் இருந்து மட்டுமே பணத்தை பறிமுதல் செய்கின்றனர் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா குற்றஞ்சாட்டினார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறும்போது, “வணிகர் தினமான மே 5-ம் தேதி, மதுரையில் 41-வது மாநில மாநாடு, விடுதலை முழக்க மாநாடாக நடைபெற உள்ளது. பல்வேறு இடர்பாடுகளை வியாபாரிகள் சந்தித்துக் கொண் டிருக்கிறோம். தமிழக அரசு சலுகைகளை கொடுத்தாலும், அதிகாரிகள் அச்சுறுத்தலை கொடுக்கின்றனர். விடுதலை முழக்க மாநாடு: உரிமம் பெறுவதில் குளறுபடிகள் தொடர்கின்றன.
முதல்வர் அறிவித்தது போல், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, தொழிலுக்கு மட்டும் உரிமம் வழங்க வேண்டும். ஜிஎஸ்டி வரியில் மத்திய அரசு மாற்றங்களை ஏற்படுத்தினால் மட்டுமே, சாமானிய மக்களின் வணிகம் நிலைக்கும். உணவு பாதுகாப்பு துறையினர் கடைக்கு ‘சீல்’ வைத்தல், ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் அபராதம் விதிப்பதை ஏற்க முடியாது. சிறைக்கும் தள்ளுகின்றனர். இதிலிருந்து வணிகர் களை பாதுகாக்கவே, விடுதலை முழக்க மாநாடு என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது.
அரசியல் கட்சியினர் கொண்டு செல்லும் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பார்ப்பதும் இல்லை, தொடுவதும் இல்லை. வியாபாரிகளிடம் இருந்து மட்டுமே பணத்தை பறிமுதல் செய்கின்றனர். கோயம்பேட்டில் கடையில் இருந்து வெளியே வந்த வியாபாரியிடம், வாசலில் நின்றுக்கொண்டு பணத்தை பறிமுதல் செய்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் முறையான ஆவணங்களுடன் வியாபாரி கொண்டு சென்ற ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
இதுபோன்ற துன்புறுத்தலால், ஏன்? தேர்தல் வருகிறது என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. எச்சரிக்கிறோம்: வியாபாரிகளை அதிகாரிகள் வஞ்சிக்கக் கூடாது. அரசியல் வாதிகள் பணத்தை எங்கு வைத் துள்ளனர் என உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த பணத்தை பறி முதல் செய்யுங்கள். வியாபாரிகள் அச்சுறுத்தப்படுவது குறித்து தலைமை செயலகத்தில் தேர்தல் ஆணையரை நாளை மறுநாள் ( நாளை ) சந்தித்து முறையிட இருக்கிறோம்.
அப்போதே அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவிக்க உள்ளோம் என எச்சரிக்கிறோம். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கைகளை திமுக, பாஜக, அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், எங்களது கோரிக்கையை பெற்றுள்ளனர். இதனை நிறைவேற்றுவதாக எழுத்து பூர்வமாக தெரிவிக்கும் கட்சியை ஆதரிப்போம். 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதில் வணிகர்கள் தெளிவாக உள்ளனர்.
நாங்கள் பொருட்களை வாங்கி விற்பனை செய்பவர்கள், வாக்கை விற்பனை செய்பவர்கள் கிடையாது. சொல்வதை செய்யும் கட்சியாக பார்த்து நாங்கள் ஆதரவளிப்போம். பிளாஸ்டிக் ஒழிப்பதில் மத்திய அரசு ஒரு சட்டத்தையும், மாநில அரசு ஒரு சட்டத்தையும் போடுகிறது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ் டிக்கை பன்னாட்டு நிறுவனங்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றன. அதனை தடை செய்யாமல், கடைகளுக்குள் நுழைந்து பிளாஸ் டிக்கை அள்ளுவது, அபராதம் விதிப்பதை கடுமையாக எதிர்க் கிறோம்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT