Published : 31 Mar 2024 08:14 PM
Last Updated : 31 Mar 2024 08:14 PM
திருவண்ணாமலை: பெண்களுக்கு சம உரிமை என்ற முழக்கம், மேடையில் எதிரொலிக்கும் நிலையில், மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 8 சதவீத பெண்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு நிறைவேற்றியது. இதன்மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மகளிருக்கு 33 சதவீத இடங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆனால், தேர்தல் களத்தில் மகளிர் பங்களிப்பு என்பது மிக மிக குறைவாக இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டாலும், அவர்களது கணவர்களின் ஆதிக்கம் தொடர்கிறது.
தேர்தல் அரசியலில் மகளிருக்கு பிரதிநிதித்துவம் அளிக்க அரசியல் கட்சிகள், ஆட்சியாளர்கள் முன்வரவில்லை என்பது மக்களவைத் தேர்தல் களம் எடுத்துக்காட்டுகிறது. தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 950 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 874 ஆண்கள், 76 பெண்கள். மக்களவைத் தேர்தலில் பெண்களின் பங்கேற்பு என்பது 8 சதவீதமாகும். பெண்களுக்கு சம உரிமை என கூறும் அரசியல் கட்சிகளின் முழக்கம், மேடையுடன் நிறைவு பெற்றுவிடுகிறது.
இது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் எம்.அஞ்சலி கூறும்போது, “பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால், 33 சதவீதத்தை கூட முழுமையாக நிறைவேற்றுவது கிடையாது. கல்வியில் மகளிர் எண்ணிக்கை உயர்ந்து வந்தாலும், வேலைவாய்ப்புகளில் அவர்களுக்கான ‘இடம்’ மறுக்கப்பட்டு விடுகிறது. இதேநிலைதான் தேர்தல் அரசியல் களத்திலும் நிடிக்கிறது. மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் 8 சதவீத பெண்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர்.
6 தொகுதிகளில் ஒருவர் கூட போட்டியிடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளன. வட இந்தியாவில், இதைவிட குறைவாக இருக்கும். எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதுபோல், மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்களுக்கான தொகுதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்போதுதான் சம உரிமை கிடைக்கும்.
சட்டப்பேரவை மற்றும் மக்களவையில் பெண்களின் உரிமைகளை மீட்பதற்கான குரல் ஒலிக்கும். தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு வாய்ப்பு வழங்கியும், கணவர்களின் ஆதிக்கம் தொடர்கிறது. முடிவெடுக்கும் அதிகாரத்தை பெண்களிடம் இருந்து கணவர்கள் பறித்துவிடுகின்றனர். இந்த நிலையிலும், மாற்றம் ஏற்பட வேண்டும்” என்றார்.
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் 31 வேட்பாளர்கள் போட்டியிடுன்றனர். இவர்களில் தீபம்மாள் சுந்தரி, பூங்கொடி ஆகிய 2 பேர் மட்டும் பெண்கள். ஆரணி மக்களவைத் தொகுதியில் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவர் மட்டுமே பெண் வேட்பாளராவார்.
இரண்டு தொகுதிகளிலும் மொத்தம் உள்ள 70 வேட்பாளர்களில் 3 பெண்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். இது, 4 சதவீதமாகும். பெண்ணுரிமை பற்றி மேடையில் முழக்கமிடும் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு மத்தியில், “நாம் தமிழர் கட்சி” கட்சி மட்டும் தேர்தல் களத்தில் பெண்களுக்கு 50 சதவீத வாய்ப்பு வழங்கி வருவது பாராட்டத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT