Published : 31 Mar 2024 07:53 PM
Last Updated : 31 Mar 2024 07:53 PM

“தமிழகத்தில் பாஜகவை அடையாளம் காட்டியதே அதிமுக தான்” - ராம சீனிவாசனுக்கு இபிஎஸ் பதிலடி

கடலூர் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

கடலூர்: "தமிழகத்தில் 1998 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை அடையாளம் காட்டியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. எங்களைப் பார்த்தா கட்சி இருக்காது என்று கூறுகிறீர்கள்" என்று மதுரை பாஜக வேட்பாளர் ராம சீனிவாசனுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது: "தமிழக முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, தந்தை மகன் இருவரும் திமுக கம்பெனியின் முதலாளிகள். திமுக கட்சி அல்ல, அது ஒரு கம்பெனி. ஆனால், அதிமுகதான், மறைந்த முதல்வர் எம்ஜிஆரால், மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சி.

மக்களுக்காக தொடங்கப்பட்ட கட்சி அதிமுக. ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்ட்ட, கடைக்கோடியில் இருக்கும் சாதாரண மக்கள்கூட ஏற்றம் பெற வேண்டும் என்பதற்காக மறைந் முதல்வர் எம்ஜிஆர் தோற்றுவித்த கட்சி அதிமுக. அதைக் கட்டிக்காத்தவர், மறைந்த முதல்வர் ஜெயலலிதா. இந்த இருபெரும் தலைவர்கள் நமக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. தமிழகத்தில் வலிமையான கட்சி அதிமுக. அதிமுகவில்தான் இரண்டு கோடி தொண்டர்கள் உள்ளனர். இளைஞர்கள், மகளிர், உழைப்பாளர்கள் நிறைந்த கட்சி அதிமுக.

அதிமுக இருப்பதால்தான், திமுகவை இயங்க முடியாத ஒரு சூழ்நிலையில் நாம் வைத்திருக்கிறோம். அதிமுக மட்டும் இல்லை என்றால், தமிழகம் ஒரு சர்வாதிகார மாநிலமாக மாறிவிடும். அதைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் அதிமுகவுக்கு மட்டும்தான் இருக்கிறது. முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும், தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவை அவதூறாகப் பேசி வருகின்றனர். என்னைப் பற்றியும் அவதூறாக பேசி வருகின்றனர். எனக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை.

ஆனால், நான் உங்களில் ஒருவனாக இருக்கிறேன். அதிமுகவில் உள்ள 2 கோடி தொண்டர்களில் நானும் ஒருவனாக இருந்து வருகிறேன். பொதுச் செயலாளர் பதவி நீங்கள் எனக்கு கொடுத்துள்ளீர்கள். எனக்கு அதைவிட உங்களில் ஒருவனாக இருப்பதில்தான் பெருமை. ஸ்டாலின் போல எப்போது பார்த்தாலும் திமுக தலைவர் என்று கூறிக்கொள்பவன் அல்ல பழனிசாமி. என்னை தொண்டன் என்றே கூறி வருகிறேன். தலைவன் அடிக்கடி மாறுவான். தொண்டன் எப்போதும் நிலையாக இருப்பவன்.

தமிழகத்தில் அதிமுக 30 ஆண்டு காலம் ஆட்சி செய்துள்ளது. இன்று இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்க காரணம், அதிமுக. இந்தியாவிலும், தமிழகத்திலும் எத்தனையோ கட்சிகள் உள்ளன. ஆனால், சந்திரகாசன் போன்ற சாதாரண தொண்டனுக்கு வாய்ப்பு கொடுப்பார்களா? அதிமுகவில்தான் கிடைக்கும். அதேபோல், ஒரு சாதாரண தொண்டன், அந்த கட்சியின் பொதுச் செயலாளராக வரவேண்டும் என்றால், அது அதிமுகவில்தான் சாத்தியம்.

இன்றைக்கு மதுரையில் பாஜக பொதுச் செயலாளர் பேசியிருக்கிறார். அவர்தான் அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன். அவர் தன்னை அடையாளம் காட்டிக் கொள்வதற்காக, என்னைப் பற்றியும், அதிமுகவைப் பற்றியும் பேசியிருக்கிறார். 2024, அதாவது இப்போது நடக்கின்ற மக்களவைத் தேர்தலுடன் அதிமுக காணாமல் போகும் என்று பேசியிருக்கிறார். காணாமல் போனால், அவர் கண்டுபிடித்துக் கொடுக்கட்டும். உங்களைப் போல எத்தனைப் பேரை பார்த்த கட்சி அதிமுக. அதிமுகவின் வரலாறு அவருக்குத் தெரியுமா?

நான் உட்பட இந்த மேடையில் உள்ள பலரும் 50 ஆண்டுகாலம் இந்த கட்சிக்காக உழைத்தவர்கள். உங்களைப் போல சொகுசு வாழ்க்கை நடத்துபவர்கள் அல்ல. இரவுபகல் பாராமல் உழைக்கின்ற உழைப்பாளிகள் நாங்கள். உழைப்பையும், மக்களுக்கு செய்யும் சேவையையும் நம்பி கட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். உங்களைப் போல வெற்று விளம்பரத்தில் அரசியல் நடத்தவில்லை. 30 ஆண்டுகள் ஆட்சி செய்து, மக்கள் நலத்திட்டங்களைச் செய்து, அதிகமான தொண்டர்களைக் கொண்ட கட்சி அதிமுக.

எங்களைப் பார்த்து 2024-க்குப் பிறகு, அதிமுக இருக்காதா? பொறுத்திருந்து பாருங்கள். உங்களைப் போன்ற வெற்று அரசியல் செய்து கொண்டிருக்கும் நபர்கள் அனைவரும் இந்த தேர்தல் உடன் அடையாளம் காணாமல் போவீர்கள். அதுதான் உண்மை. அதுமட்டுமல்ல, 1998-ல் நான் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டேன். அப்போதுதான், பாஜகவுடன் கூட்டணி வைத்தோம். அப்போதுதான், பாஜகவின் சின்னம் தாமரை என்று அடையாளம் காட்டியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. உங்களுடைய அடையாளத்தையே அதிமுகதான் காட்டியது. எங்களைப் பார்த்தா கட்சி இருக்காது என்று கூறுகிறீர்கள்" என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x