

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில் தனியார் செய்தி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஆந்திரா அல்லது தமிழ்நாட்டில் என்னை போட்டியிட வைக்க விரும்பினார். ஆனால் நான் தேர்தலில் போட்டி யிடவில்லை என்று கூறிவிட்டேன். தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை" என்று தெரிவித்தார்.
அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேட்டி குறித்து நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை எம்பியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவர் தாக்கல் செய்த சொத்து விவரங்கள் தற்போது அலசி ஆராயப்படுகின்றன. இதன்படி தெலங்கானா தலை நகர் ஹைதராபாத் அருகே நிர்மலா சீதாராமன், அவரது கணவர் பரகாலா பிரபாகருக்கு சொந்தமான வீடு உள்ளது.
இதன் மதிப்பு ரூ.1.7 கோடி ஆகும். தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டம், குன்ட்லூர் கிராமத்தில் அமைச்சர் நிர்மலாவுக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.17.08 லட்சம் ஆகும். ரூ.19.4 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், ரூ.3.98 லட்சம் மதிப்பிலான வெள்ளி பொரூட்கள், ரூ.28,200-க்கு வாங்கப்பட்ட பழைய ஸ்கூட்டர் ஆகியவை அவரிடம் உள்ளன. அவரது வங்கிக் கணக்குகளில் ரூ.35.52 லட்சம் உள்ளது. மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் ரூ.5.8 லட்சம், பிபிஎப் திட்டத்தில் ரூ.1.6 லட்சத்தை அவர் முதலீடு செய்துள்ளார்.
அவரது கையிருப்பில் ரூ.7,350 ரொக்கம் மட்டுமே இருப்பதாக 2022 பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். நிர்மலா சீதாராமனும் அவரது கணவரும் இணைந்து வீட்டுக் கடன் பெற்றுள்ளனர். 19 ஆண்டுகள் கால அவகாசத்தில் பெறப்பட்ட இந்த வீட்டுக் கடன் கடந்த 2022-ம் ஆண்டு நிலவரப்படி ரூ.5.44 லட்சமாக இருந்தது. ஒட்டுமொத்தமாக நிர்மலா சீதாராமனிடம் ரூ.2.53 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இதில் ரூ.1.87 கோடி அசையா சொத்துகள். ரூ.65.55 லட்சம் அசையும் சொத்துகள் ஆகும்.