

ராமநாதபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேச்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வத்தின் அறிமுகக் கூட்டம், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
அப்போது, கூட்டத்தில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு மண்டப வாசலில் பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அப்போது, அந்த பெண்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் பணம் கொடுப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், இந்தக் கூட்டம் நடத்த மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், அதை மீறி காலையில் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இவ்விரு சம்பவங்கள் குறித்து அறந்தாங்கி காவல் நிலையத்தில் தேர்தல் ஒளிப்பதிவு கண்காணிப்புக் குழுத் தலைவர் அருள் நேற்று புகார் அளித்தார். இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.