

சென்னை: தமிழகத்தில் சராசரியாக தினசரிமின்நுகர்வு 300 மில்லியன் யூனிட்களாக உள்ளது. இது கோடைகாலத்தில் 350 மில்லியன் யூனிட்களாக அதிகரிக்கும். கடந்த ஆண்டுஏப்.20-ம் தேதி தினசரி மின்நுகர்வு423.785 மில்லியன் யூனிட்களாக அதிகரித்தது.இதுவே இதுவரை உச்சபட்ச அளவாக இருந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கோடைகாலம் தற்போது தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால், தினசரி மின்நுகர்வுஅதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் (மார்ச் 29) தினசரி மின்நுகர்வு எப்போதும் இல்லாத அளவாக 426.439 மில்லியன் யூனிட் களாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: பொதுவாக, கோடைகாலம் தொடங்கினாலே வீடுகளில் ஏசி,மின்விசிறி, ஏர்கூலர் உள்ளிட்ட மின்சாதனங்களின் பயன்பாடு அதிகரிக்கும். தற்போது ஐபிஎல்கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருவதால், வீடுகளில் நள்ளிரவுக்குப் பிறகே மக்கள் உறங்கச் செல்கின்றனர். அத்துடன், தற்போது பள்ளித்தேர்வுகள் மற்றும் தேர்தல் பிரச்சாரம் போன்ற காரணங்களாலும் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
எனவே, மின்தேவையை சமாளிக்க மின்வாரியம் தனது சொந்தமின்னுற்பத்தியை அதிகரித்துள் ளது. அத்துடன், தனியாரிடமிருந்து காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்சாரத்தையும் வாங்குகிறது.
இவைதவிர, மத்திய அரசு நிறுவனங்களிடம் இருந்தும் குறுகியகால, நீண்டகால அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே, கோடையில் மின்வெட்டு ஏற்படாமல் சமாளிக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.