Published : 31 Mar 2024 10:40 AM
Last Updated : 31 Mar 2024 10:40 AM

வட சென்னை தொகுதியில் 4 முனை போட்டி: வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்

படங்கள்: ம.பிரபு

சென்னை: வட சென்னை தொகுதியில் 4 முனை போட்டி நிலவுகிறது. திமுக வசம் உள்ள இத்தொகுதியை இம்முறை யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வட சென்னை மக்களவைத் தொகுதியில் திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம், பெரம்பூர், திரு.வி.க.நகர், கொளத்தூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இத்தொகுதியில் 7 லட்சத்து 30 ஆயிரத்து 395 ஆண், 7 லட்சத்து 65 ஆயிரத்து 286 பெண், மூன்றாம் பாலினத்தினர் 543 பேர் என மொத்தம் 14 லட்சத்து 96 ஆயிரத்து 224 வாக்காளர்கள் உள்ளனர்.

வட சென்னை மக்களவைத் தொகுதி உருவானதிலிருந்து நடைபெற்ற தேர்தல்களில் திமுக 11 முறையும், காங்கிரஸ் 3 முறையும், அதிமுக 1 முறையும் வென்றுள்ளன. இதனால் வட சென்னை திமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது.

வட சென்னையில் அதிமுக சார்பில் ராயபுரம் மனோ போட்டியிடுகிறார்.

இவர் கடந்த சில நாட்களாக தொகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின்போது, தான் இருமுறை மாமன்ற உறுப்பினராக மக்கள்பணியாற்றியது, அதிமுக அரசின் 10ஆண்டு சாதனைகள் மற்றும் வட சென்னையில் அதிமுக அரசால் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டு வாக்கு சேகரித்து வருகிறார். மத்திய, மாநில அரசுகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி இரட்டை இலைக்கு வாக்குகளாக மாறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வடசென்னை பாஜக வேட்பாளர் பால்கனகராஜை ஆதரித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பெரம்பூர் பேருந்து நிலையம் அருகே நேற்று பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது ரிலாக்சாக தேநீர் அருந்தினார்.

மேலும், ரயில்வே முனையம் அமைப்பது, போட்டித் தேர்வு பயிற்சி மையம் அமைத்தல், ரயில்வே கடவுப் பாதையில் மேம்பாலம் அமைப்பது என்பன உள்ளிட்ட 30 வாக்குறுதிகளை அளித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

கலாநிதி வீராசாமி (திமுக): வட சென்னை தொகுதியில் திமுக சார்பில் கடந்த முறை வெற்றி பெற்ற வேட்பாளர் கலாநிதி வீராசாமி இந்த முறையும் களம் இறக்கப்பட்டுள்ளார். வட சென்னை மேம்பாட்டுக்காக முதல்வர் ஸ்டாலின் ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கியதை முன்வைத்தும், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை முன்வைத்தும் அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

குறிப்பாக, வட சென்னையில் ஐடி நிறுவனங்களை கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வாக்கு சேகரிப்பின்போது தெரிவித்து வருகிறார்.

பால் கனகராஜ் (பாஜக): பாஜக வேட்பாளர் பால்கனகராஜ் தனது பிரச்சாரத்தை நாளை தொடங்குகிறார். எனினும், அவருக்காக கட்சித் தலைவர் அண்ணாமலை நேற்றுமுன்தினம் திருவொற்றியூர் பகுதியில் வாக்கு சேகரித்தார். கூட்டணிக் கட்சியான தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பெரம்பூர் பகுதியில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அவர் பேசுகையில், ‘‘பிரதமர் மோடியின் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து துறைகளும் வளர்ச்சி அடைந்து வருகின்றன. இந்த வளர்ச்சி தொடர வேண்டும் எனில், 3-வது முறையாக பாஜக வெற்றி பெற வேண்டும். அதன் மூலம், இந்தியா வல்லரசாக மாறும்.

தமிழகத்தில் வீட்டு வரி , சொத்து வரி, பத்திரப் பதிவு கட்டணம், மின் கட்டணம், பால் விலை என திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வு விண்ணைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது. மக்கள் விரோத திமுக ஆட்சிக்கு இத்தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்றார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அமுதினி, கொடுங்கையூரில் வாக்கு சேகரித்தா ர். படங்கள்: ம.பிரபு

டாக்டர் அமுதினி (நாதக): வடசென்னையில் நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள டாக்டர் அமுதினி , மத்திய - மாநில அரசுகளை விமர்சித்து வாக்கு சேகரித்து வருகிறார். அதுமட்டுமின்றி, வேறு எந்தக் கட்சியிலும் இல்லாத வகையில், நாம் தமிழர் கட்சியில் மட்டுமே பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால், அனைத்திலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி செயல்படுத்திக் காட்டுவோம் என பிரச்சாரம் செய்து, வாக்குச் சேகரித்து வருகிறார்.

மொத்தத்தில், வடசென்னை தொகுதியில் 4 முனைப் போட்டி நிலவுகிறது. திமுகவின் வசம் உள்ள இத்தொகுதியை இம்முறை யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x