

மக்களுக்கு புரியும் வகையில் தனது கொள்கைகளை எடுத்துரைப்பேன் என தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகர் கமல்ஹாசன் கூறினார்.
ராமேசுவரம் கணேஷ் மகாலில் மீனவ சங்கப் பிரதிநிதிகளை நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "மீனவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டியது தனது கடமை. தமிழகத்தில் முக்கியமான தொழில்களில் மீன்பிடித் தொழிலும் ஒன்று. மீனவத் தொழில் பாதுகாக்கப்பட வேண்டும். மீனவர்களும் பாதுகாப்புடன் தொழில் செய்ய வேண்டும். உங்களுக்கு ஏற்படும் சுக துக்கங்களை பத்திரிக்கை வாயிலாக அறிவதற்கு பதிலாக நான் நேரில் சந்தித்து அறிய வந்திருக்கிறேன். மாறி மாறி வரும் ஆட்சியாளர்கள் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்களே தவிர அதனை நிறைவேற்றவில்லை . நீங்கள் செயல்பட வேண்டிய விதம், சர்வதேச சட்டங்களைப் பற்றியும் நாம் பேச வேண்டும். நாம் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலாம், அதற்கான நாளும் ,நேரத்தையும் தேர்வு செய்வோம்" என்றார்.
பொன்னாடை வேண்டாம்.. நானே ஆடை..
மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு எவ்வித உதவியும் செய்யவில்லை என மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கூறினார். கமல்ஹாசன் தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவுவர் என நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும், கடலில் தத்தளிக்கும்போது தப்பிப் பிழைக்க ஒரு கட்டை கிடைப்பது போல் கமல்ஹாசன் கிடைத்துள்ளார் எனக் கூறினர். மீனவர் சங்கப் பிரதிநிதிகளை ஆரத்தழுவி கமல் தனது ஆதரவைத் தெரித்தார். பொன்னாடைகளைத் தவிர்த்த கமல்ஹாசன். பொன்னாடைகள் போர்த்திக் கொள்ளும் வழக்கம் இல்லை. இங்கு நானே ஆடைதான். அவர்களை நான் தழுவும்போது அவர்களுக்கு நான் ஆடை, எனக்கு அவர்கள் ஆடை என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
கலாம் வீட்டுக்குச் சென்றதில் அரசியல் இல்லை..
அப்துல் கலாமின் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தைத் துவக்கியதில் எந்த அரசியலும் இல்லை. கலாம் பள்ளிக்கு செல்ல நினைத்ததிலும் எந்த அரசியலும் இல்லை. ஆனால், நான் கலாம் பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்கப்பட்டதில் அரசியல் இருக்கிறது. சினிமாவிலேயே ஆயிரம் தடைகளைத் தாண்டி சரித்திரம் படைத்தேன். அரசியலிலும் அத்தகைய தடைகளைத் தாண்டிதான் சரித்திரம் படைக்க வேண்டும் என்றால் அதற்கும் நான் தயார்.
கலாமின் பள்ளிக்கூடத்துக்கு செல்லவிடாமல் மட்டுமே அவர்களால் தடுக்க முடியும் ஆனால் நான் பாடம் படிப்பதை அவர்களால் தடுக்க முடியாது. கலாமின் நாட்டுப்பற்று கலாமின் வாழ்க்கை எனக்கு பாடம். அவரது வாழ்க்கை எனது பாடத்தின் ஒரு பகுதி.
நேற்றிரவு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எனக்கு தொலைபேசியில் வாழ்த்து கூறினார். அப்போது அவர், கொள்கைகள் தொடர்பாக பேசினார். என்னைப் பொருத்தவரை 'இஸங்கள்' என்பது முக்கியமல்ல; மக்களுக்கு என்ன செய்யப்போகிறோம் என்பதே முக்கியம். இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் எனது கொள்கைகளை எடுத்துரைப்பேன். மக்களுக்கு புரியும் விதத்தில் எனது கொள்கைகளைத் தெரிவிப்பேன். இதுவரை தமிழ் ரசிகர்கள் உள்ளத்தில் வாழ்ந்த நான் இனி அவர்களது இல்லத்தில் வாழ விரும்புகிறேன்.
இவ்வாறு கமல் பேசினார்.