Published : 31 Mar 2024 04:00 AM
Last Updated : 31 Mar 2024 04:00 AM

நாட்டுப்புற பாடல்பாடி வாக்கு சேகரித்த நாகை இந்திய கம்யூ. வேட்பாளர்

திருவாரூர் மாவட்டம் புதுக்குடியில் நடைபெற்ற இண்டியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டத்தில் நாட்டுப்புற பாடல் பாடிய நாகை இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வை.செல்வராஜ். உடன் எம்.பி. எம்.செல்வராஜ், எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் உள்ளிட்டோர்.

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் புதுக்குடி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இண்டியா கூட்டணியின், நன்னிலம் சட்டப்பேரவை தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

திமுக திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்எல்ஏ தலைமை வகித்தார். நாகை எம்.பி எம்.செல்வராஜ், நாகை மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் வை.செல்வராஜ் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். கூட்டத்தில் பங்கேற்ற வேட்பாளர்வை. செல்வராஜ், ‘‘ஏ ஆக்காட்டி, ஆக்காட்டி.. எங்கெங்கே முட்டையிட்ட... எங்கெங்கே முட்டையிட்ட..’’என்னும் நாட்டுப் புற பாடலைப் பாடி உற்சாகப் படுத்தினார். தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், வேட்பாளர் வை.செல்வராஜூக்கு ஆதரவாக மக்களிடம் தீவிர பிரச்சாரம் செய்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

வேட்பாளர் வை.செல்வராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றம் தொடங்கியவர். இவர் கிராமங்களில் கட்சி பணியாற்றிய போதெல்லாம் மக்கள் பிரச்சினைகளை பாடல்களாக பாடுவார் என்பது இந்திய கம்யூனிஸ்ட் கட்சினருக்கு தெரியுமென்றாலும் அவரது இந்த தனித் திறமை வாக்கு சேகரிப்புக்கு பெரும் உதவியாக இருப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பெருமையுடன் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x