Published : 31 Mar 2024 04:06 AM
Last Updated : 31 Mar 2024 04:06 AM
வேலூர்: புரட்சி பாரதம் கட்சி பாஜக கூட்டணிக்கு வரவுள்ளது என வேலூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தெரிவித்தார்.
வேலூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் புதிய நீதி கட்சியின் நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம், வேட்பாளர் அறிமுக கூட்டம் கே.வி.குப்பத்தில் நடைபெற்றது. இதில், ஏ.சி.சண்முகம் பேசும் போது, ‘‘கே.வி.குப்பம் சட்டப்பேரவை உறுப்பினர் நமது கூட்டணிக்கு வர இருப்பதாக தகவல் வந்துள்ளது. இந்த கூட்டணி மூன்றாவது கூட்டணி என்றார்கள். பாமக வந்தவுடன் முதல் கூட்டணியாக மாறியது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது.
எங்கோ வெளிநாட்டில் இருக்கக் கூடிய போதைப் பொருள் திமுக நிர்வாகிகளால் தமிழகத்துக்கு வந்துள்ளது. தமிழகத்தில் போதைப் புழக்கம் அதிகமாகி உள்ளது. அதன் தலைவராக திமுகவின் ஜாபர் சாதிக் உள்ளார். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மகளிர் உரிமைத் தொகை பெறுவோரை கொச்சைப் படுத்துகிறார். இதைவிட யாரும் நமது மகளிரை கொச்சைப் படுத்த முடியாது.
பொய் சொல்வதற்கென்று ஒரு கட்சி உள்ளது என்றால் அது திமுக-தான். ஒவ்வொரு ஆண்டும் 600 பேருக்கு எனது கல்லூரியில் இலவச சேர்க்கை கொடுப்பேன். அதே போல என்னை எதிர்த்து போட்டியிடுபவர் பள்ளி, கல்லூரிகளை நடத்தி வருகிறார். அதில், 100 பேருக்கு வேண்டாம், ஒரு பத்து பேருக்காவது இலவசமாக படிக்க சேர்க்கை வழங்க சொல் லுங்கள் பார்ப்போம்’’ என்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் ஏ.சி.சண்முகம் கூறும்போது, ‘‘என்னுடைய பெயரிலேயே 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தது ஏதேச்சையாக நடந்ததாக தெரியவில்லை. தற்போதைய எம்.பி., தோல்வி பயத்தால் இவ்வளவு பேரை உருவாக்கி இருக்கிறார். ஒன்பது சண்முகத்தை கொண்டு வர காரணம் என்னை தோற்கடிக்கவும், வாக்குகளை பிரிக்கவும் தான். ஆனால், அவர்கள் எதிர்பார்ப்பது நடக்காது. எத்தனை சண்முகத்தை நிறுத்தினாலும் இந்த ஏ.சி.சண்முகம் தான் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் உயர்த்தியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன். எந்தக் காரணத்தை முன்னிட்டும் 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு கைவிடாது. இன்னும் அதிகமாக நிதி கொடுப்பார்கள். நிச்சயமாக இந்த திட்டம் தொடர்ந்து செயல்படும். இந்த தேர்தல் முடிந்த பிறகு யார் டம்மி கூட்டணி என்பது தெரியவரும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT