Published : 30 Mar 2024 10:07 PM
Last Updated : 30 Mar 2024 10:07 PM

“பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு...” - தமிழக பாஜகவை கலாய்த்த முதல்வர் ஸ்டாலின்

சேலம்: “தமிழகத்தில் பரிதாபமாக இருக்கிறது பாஜக. ‘பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு’ என்ற காமெடி போல, தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் கிடைக்காமல் தமிழக பாஜக திணறியது” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெற்ற இண்டியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் சேலம் வேட்பாளர் செல்வகணபதி, கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசன் ஆகியோரை அறிமுகப்படுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “எப்படியாவது ஆட்சிக்கு வர வேண்டும் என்ற வெறியில், பல தியாகங்களால் உருவான இந்திய ஜனநாயகத்தையே மோடி சீரழித்துவிட்டு இருக்கிறார்.

இதனால் ஒட்டுமொத்த இந்திய மக்களும் பாஜகவின் சர்வாதிகாரப் போக்கின் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அதனால்தான் இந்த நாட்டின் நிதியமைச்சர் உட்பட முன்னணி பாஜகவினரும் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்குகிறார்கள்.

இங்கு தமிழ்நாட்டில் அதைவிடப் பரிதாபமாக இருக்கிறது பாஜக. ஒரு காமெடி வரும் ஞாபகம் இருக்கிறதா. “பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மெண்ட் வீக்கு” என்று… அதுபோல, தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர் கிடைக்காமல் - கவர்னர் – சிட்டிங் எம்.எல்.ஏ. என்று அழைத்து நிறுத்தி, செய்தியில் இருக்க வேண்டும் என்று பார்க்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? பா.ஜ.க.வுக்கு இருக்கும் பயமெல்லாம், நோட்டாவைவிடக் கீழே சென்றுவிடாமல் டெபாசிட்டாவது வாங்க வேண்டும் என்ற முயற்சிதான் நன்றாகத் தெரிகிறது.

அதனால்தான், மோடி, இப்போது திடீர் என்று எம்.ஜி.ஆரையும் – ஜெயலலிதாவையும் புகழ்ந்து பேசுகிறார். திடீர் என்று ஜெயலலிதா மேல் ஏன் மோடிக்கு பாசம் பொங்குகிறது? ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, அவரைப் பாராட்டியது உண்டா? “இந்தியாவிலேயே அதிகமாக ஊழல் நடைபெறும் ஆட்சி ஜெயலலிதா ஆட்சிதான்” என்று மோடி சொல்லியது இப்போது ஞாபகமில்லையா?

“தமிழ்நாட்டில் உள்கட்டமைப்பு வசதி ஏற்படாததற்கு ஒரு பெண்தான் காரணம்” என்று ஜெயலலிதாவை குறை சொன்னவர்தான் மோடி. ‘தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதற்கு ஜெயலலிதாவும் - சோனியாவும்தான் காரணம்’ என்று குற்றம் சாட்டியவரும் மோடிதான். இதையெல்லாம் பிரதமர் மோடி மறந்துவிட்டாரா? எதற்கு இந்த நாடகம்?

அடுத்து, பெண் சக்தியைப் பற்றி சேலத்தில் பேசியிருந்தார். உண்மையில், பா.ஜ.க. ஆட்சியில் பெண்களின் நிலைமை என்ன? பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான காங்கிரஸ் கொண்டுவந்த நிர்பயா நிதியை முறையாக ஒதுக்காமல் விட்டது பாஜக ஆட்சிதான். பாஜக எம்.பி.யால் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது, அவர்கள் போராடியது எல்லாமே பாஜக ஆட்சியில்தான்.

குஜராத்தில் பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது, மோடி ஆட்சியில்தான். மணிப்பூரில் பெண்கள் என்ன என்ன கொடுமைகளுக்கு ஆளாகினார்கள் என்று நம்முடைய எம்.பி.க்கள் குழு சென்று பார்த்து வந்து கதறினார்களே, அந்த கொடுமைகளை எல்லாம் இரக்கமில்லாமல் வேடிக்கை பார்த்தது மோடி ஆட்சிதான். ஜம்மு காஷ்மீரில், 8 வயதுக் குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிக்கு ஆதரவாக இரண்டு பாஜக அமைச்சர்கள் ஊர்வலம் சென்றார்களே?

உத்தரப் பிரதேசத்தில் வேலை கேட்டுச் சென்ற இளம்பெண்ணை, பா.ஜ.க. எம்.எல்.ஏ குல்தீப் சிங்கும் அவரின் சகோதரரும், நண்பர்களும் சேர்ந்து கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்தார்களே? அதுமட்டுமா, அந்தப் பெண்ணின் தந்தையை அநியாயமாகச் சிறையிலேயே வைத்து கொன்றார்களே? பாலியல் வல்லுறவுக்கு உள்ளான ஒரு பெண்ணை நீதிமன்றத்திற்குச் செல்லும் வழியிலேயே உயிருடன் கொளுத்தினார்களே? அதுவும் பாஜக ஆட்சியில்தான்.

இந்தச் செய்திகளுக்கு எல்லாம் பிரதமரிடம் இருந்து பதில் வந்திருக்கிறதா? வருத்தப்படுகிறேன் என்று பெயரளவுக்காவது சொல்லியிருக்கிறார்களா? இந்த லட்சணத்தில் பெண் சக்தி என்று பேசுவதற்கு உங்களுக்கும் – பா.ஜ.க. ஆட்சிக்கும் என்ன தகுதி இருக்கிறது? என்ன அருகதை இருக்கிறது?” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x