

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், உக்கரையில் பழமையான தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அங்கன்வாடி சமையலர் நேற்று காயமடைந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உக்கரை, பிரதான சாலையைச் சேர்ந்தவர் சகுந்தலா(47). இவரது கணவர் சத்தியமூர்த்தி ஏற்கனவே உயிரிழந்து விட்டார். சகுந்தலா, அம்மையப்பனில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சமையலராக பணியாற்றி வருகி்ன்றார். இவர், சவுந்தர்யன்(24), கேசவன்(21) ஆகிய 2 மகன்களுடன் பழமையான தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில், சகுந்தலா, நேற்று மதியம் பள்ளிக்குச் சென்று விட்டு, தனது வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வீட்டின் மேற்கூரை இடிந்து சகுந்தலா மேல் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த சகுந்தலாவை, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது தொடர்பாக திருவிடைமருதூர் வட்டாட்சியரிடமும், திருப்பனந்தாள் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்ததின் பேரில், அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.