Published : 30 Mar 2024 08:28 AM
Last Updated : 30 Mar 2024 08:28 AM

தேர்தல் ஆணையத்தின் ‘சி விஜில்’ செயலியில் நாடு முழுவதும் 79,000 விதிமீறல்கள் பதிவு

சென்னை: தேர்தல் தொடர்பான புகார்களுக்கு 100 நிமிடங்களில் தீர்வு காணும் ’சி விஜில்’ செயலி மூலம் கடந்த 14 நாட்களில் 79 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டு 99 சதவீதம் தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களுக்கு விரைவான தீர்வு காணும் வகையில் ‘சி விஜில்’ செயலியை உருவாக்கி கடந்த 2018-ம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது. பொதுமக்கள், தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே, காணும் தேர்தல் நடத்தை விதி மீறலை புகைப்படமாகவோ, வீடியோவாகவோ பதிவு செய்து இந்த செயலி மூலம் அனுப்பலாம்.

இந்த செயலியில் பெறப்படும் புகார் பதிவின் மீது அடுத்த 100 நிமிடங்களுக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. பொதுமக்கள் விரும்பினால் தங்கள் பெயரை தவிர்க்கலாம். மேலும், புகார் அளிப்பவர் விவரங்களும் ரகசியம் காக்கப்படும்.

இந்த செயலியை பொதுமக்கள் தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன்பின் தேர்தல் விதிமீறல் குறித்து நிகழ்நேரத்தில் வீடியோ அல்லது புகைப்படத்தை பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்யப்படும் வீடியோ, புகைப்படத்தை மீண்டும் சரியாக இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய வசதி உள்ளது. அதன்பின் வீடியோ, புகைப்படம் எடுக்கப்பட்ட சரியான நிகழ்விடத்தை பதிவு செய்ய வேண்டும். புகார் தொடர்பான சம்பவம் குறித்த தகவல்களையும் பதிவிடலாம். அதன்பின் புகாரை அனுப்பலாம்.

இந்த புகார் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலர், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு செல்லும். இதுதவிர தேர்தல் தொடர்பான கட்டுப்பாட்டறைக்கும் செல்லும். அவர்கள் சம்பந்தப்பட்ட பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவுக்கு அனுப்புவர்.

அவர்கள் அங்கிருந்து சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று, புகார் மீது நடவடிக்கை எடுத்து, விவரத்தை தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரிவிப்பார்கள். இந்த நிகழ்வுகள் அனைத்துக்கும் குறிப்பிட்ட கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறுதியாக 100 நிமிடங்களுக்குள் புகார்களுக்குத் தீர்வு காணப்படுகிறது.

இந்த மக்களவை தேர்தலில், ‘சி விஜில்’ செயலியை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று முன்தினம் வரை 1300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேநேரம், நாடு முழுவதும் நேற்று காலை வரை 79 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் 99 சதவீதம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. 89 சதவீதம் புகார்களுக்கு 100 நிமிடங்களுக்குள் தீர்வு பெறப்பட்டுள்ளன.

இதில் 58,500 புகார்கள் சட்ட விரோத பதாகைகள் வைப்பது தொடர்பாகவும், 1,400 புகார்கள் பணம், பரிசு, மதுபானம் விநியோகம் குறித்தும், 1,000 புகார்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரச்சாரம் செய்தது தொடர்பாகவும் பெறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பொதுமக்கள் அதிகளவில் இந்த செயலியைப் பயன்படுத்தி விதிமீறல் தொடர்பான புகார்களை அளிக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாரும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x