Published : 30 Mar 2024 08:38 AM
Last Updated : 30 Mar 2024 08:38 AM
சென்னை: தொடக்கக் கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
தமிழகத்தில் மாறி வரும் கற்றல்-கற்பித்தல் முறைகளுக்கேற்ப அனைத்து அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி (டேப்) வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. அதன்படி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இந்த கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது.
முதல்கட்டமாக செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த 14,796 ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கான கையடக்க கணினிகள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
தொடர்ந்து 2-ம் கட்டமாக 17 மாவட்டங்களைச் சேர்ந்த 18,625 ஆசிரியர்களுக்கும், 3-ம் கட்டமாக 6 மாவட்டங்களைச் சேர்ந்த 11,711 ஆசிரியர்களுக்கும் கையடக்க கணினிகள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
அவ்வாறு பெறப்படும் கையடக்க கணினிகளை மேல்நிலை, உயர்நிலைப் பள்ளி தேர்வு வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் வைத்து பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். அந்த அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
அங்கு பாதுகாப்புக்காக இருக்கும் போலீஸாரிடம் இருந்து பாதுகாப்பு குறித்த தகவலை தினமும் பெற வேண்டும். மேலும் இதில் எந்த சுணக்கமோ அல்லது கவனக் குறைவான செயல்பாடோ இருக்கக் கூடாது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT