Published : 30 Mar 2024 08:44 AM
Last Updated : 30 Mar 2024 08:44 AM
சென்னை: மதுபான விடுதியின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 ஊழியர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்ட விடுதிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில், பிரபல தனியார் மதுபான விடுதி 2 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. ‘பார்’ உடன் கூடிய விடுதியில் நேற்று முன்தினம் இரவு 7.15 மணியளவில் முதல் மாடியின் மேல் தளத்தில் உள்ள கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளில் சிக்கி, அங்கு பணி செய்து வந்த மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (22), அதே மாநிலத்தைச் சேர்ந்த லல்லி (24), திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (48) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து தொடர்பாகஅபிராமபுரம் போலீஸார், முதல்கட்டமாக விடுதி மேலாளர் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த சதீஸைகைது செய்யதுள்ளனர். உரிமையாளர் உட்பட தலைமறைவான சிலரை தேடி வருகின்றனர்.
கட்டிடம் இடிந்து விபத்து நடைபெற்ற பகுதி அருகே மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதாகவும், இதனால் மதுபான விடுதி கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு விபத்து நடந்திருக்கலாம் என்றும் முதலில் கருதப்பட்டது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் கள விசாரணை நடத்தி வருகின்றனர் .
மதுபான விடுதி கட்டிடம் இடிந்து விழுந்தபோது அதை நேரில் பார்த்த ஊழியர்களில் சிலர் கூறுகையில், ``மதுபான விடுதியில் வேலை செய்யும் நாங்கள் மாலை 3 மணியிலிருந்து 6.45 மணி வரை ஓய்வில் இருந்தோம். பிறகு விடுதிக்கு வாடிக்கையாளர்கள் வரத் தொடங்கியதால் மேக்ஸ், லல்லி ஆகிய இருவரும் மேசையை துடைத்து சுத்தம் செய்து கொண்டிருந்தனர். சைக்ளோன் ராஜ் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில் திடீரென மேற்கூரை இடிந்துவிழுந்தது'' என்றனர்.
விடுதிக்கு சீல் வைப்பு: இரவு 10 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்திருந்தால் உயிர்ச்சேதம் அதிகரித்திருக்கும் என்று போலீஸார் தெரிவித்தனர். விபத்துக்கான காரணம் குறித்து வல்லுநர்களும் மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ அதிகாரிகளும் விசாரணை நடத்துகின்றனர். மதுபான விடுதி பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT