

அரூர்: வேலைக்காக வெளியூர்களுக்கு சென்றவர்களை அவர்களது குழந்தைகள் மூலம் வாக்களிக்க வரவழைக்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர். தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரூர் சட்டப்பேரவைத் தொகுதி கோபிநாதம்பட்டி கிராமத்தில் அதிக அளவில் போயர் இன மக்கள் வசித்து வருகின்றனர் இவர்கள் கோவை, திருச்சி மற்றும் கேரளாவில் கல் உடைக்கும் பணிக்காக சென்று அங்கேயே தங்கி பணியாற்றி வருகின்றனர்.
குழந்தைகளை வயதானவர்களின் கண்காணிப்பில் விட்டுவிட்டு செல்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரு முறை தங்கள் ஊரில் நடைபெறும் பொங்கல் விழா மற்றும் கோயில் திருவிழாக்களுக்கு மட்டுமே வந்து செல்கின்றனர்.
உள்ளாட்சி தேர்தலில் அப்பகுதி வேட்பாளர்கள் அவர்களை உரிய கவனிப்புடன் அழைத்து வந்து வாக்களித்தவுடன் அனுப்பி வைப்பர். ஆனால், சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் கோபிநாதம்பட்டி கிராமத்தில் சுமார் 900 வாக்காளர்கள் உள்ள நிலையில் பொதுத் தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவீதம் மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது.
இதனால், வாக்குப்பதிவு குறைந்த இடங்களில் இந்தமுறை வாக்குப்பதிவை அதிகரிக்க சம்பந்தப்பட்ட தேர்தல் அலுவலர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கிராமத்தில் விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.
இருந்தபோதும் வயதான முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே பெருமளவு இருப்பதால் வெளியூரில் வசித்து வருபவர்களை வரவழைக்க அரூர் கோட்டாட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான வில்சன் ராசசேகர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் புதிய முயற்சியை எடுத்துள்ளனர்.
அதன்படி, கிராமங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பயின்று வரும் குழந்தைகளிடம் பேசும் அதிகாரிகள், தேர்தல் குறித்தும், வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் விளக்கினர். வெளியூரில் இருந்தாலும் தினசரி தங்களுடன் பேசும் தாய், தந்தையிடம் வரும் ஏப்.19-ம் தேதி நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க கண்டிப்பாக வர வேண்டும் என வலியுறுத்தி அழைக்குமாறு குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதேபோல் பள்ளி ஆசிரியர்கள் மூலமும் குழந்தைகளிடம் தினமும் தேர்தல் குறித்து விளக்கி அவர்களது பெற்றோரை வரவழைக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இது குறித்து கோட்டாட்சியர் வில்சன் ராசசேகரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், வாக்குப்பதிவு குறைந்து காணப்படும் இக்கிராமத்தில் தொழிலுக்காக வெளியூர் சென்றுள்ளவர்களை இம்முறை வாக்களிக்க வரவழைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பள்ளி மாணவர்கள் மூலம் மட்டுமின்றி வாக்குச்சாவடி அலுவலர்கள், பணியாளர்கள், ஊராட்சித் தலைவர் மூலம் அவர்களை தொடர்பு கொண்டு வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விளக்கி வரவழைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக வரும் தேர்தலில் வழக்கத்தைவிட இங்கு வாக்குப்பதிவு கூடும் என நம்புகிறோம், என்றார்.