Published : 30 Mar 2024 05:25 AM
Last Updated : 30 Mar 2024 05:25 AM
தாம்பரம்: பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ், செங்கல்பட்டு மாவட்டத்தில் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ள 75 வாக்குச்சாவடி மையங்களில், தேவைப்படும் பட்சத்தில் மத்திய ரிசர்வ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த, தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ச.அருண்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில், அனைவரும் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர். மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தேர்தல் விழிப்புணர்வுக்கான கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டுள்ள செல்ஃபி ஸ்டாண்டில் மாவட்ட ஆட்சியர் புகைப்படம் எடுத்துக் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதேபோல், தாம்பரம், கோவளம் உட்பட பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 24 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 20 முதல் 27-ம் தேதி வரை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில், 32 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
மேலும், சின்னங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மார்சி 30-ம் தேதி (இன்று) வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். இதன்பின்னர், இறுதி வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும். மேலும், மாவட்டத்தில் 2,825 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
இதில், தேர்தல் அலுவலர்களால் 75 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களாக கண்டறியப்பட்டுள்ளன. இங்கு, காவல்துறை சார்பில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், தேவைப்படும் பட்சத்தில் மத்திய ரிசர்வ் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
மேலும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மகளிர் சுய உதவி குழுக்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள் கொண்டு பொதுமக்கள் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துதல், விழிப்புணர்வு பேரணியை செயல்படுத்துதல், துண்டு பிரசுரங்கள் விநியோகித்தல், கோலம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், உறுதிமொழி ஏற்றுக்கொள்ளுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்தல வசதி உட்பட வாக்காளர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகளை, தேர்தல் அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இவைதவிர, 85 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கப்பதற்கான படிவம் 12 டி விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெறப்பட்டுள்ளன.
பொதுமக்கள் தேர்தல் குறித்து சந்தேகங்களையோ அல்லது தங்களின் குறைகளையோ ஆப் வாயிலாக தெரிவிக்கலாம். மேலும், ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவ்வப்போது தேர்தல் தொடர்பான பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT