

சென்னை: இந்திய கடலோர காவல்படை கிழக்குப் பிராந்தியம் சார்பில், 2023-ம்ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட படைப் பிரிவு மற்றும் கப்பல்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கடலோர காவல்படை கிழக்கு மண்டலத்தின் தலைமைத் தளபதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் டோனி மைக்கேல் வெற்றி பெற்றோருக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
கடல்சார் செயல்பாடுகள், பராமரிப்பு,மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றுதல் பிரிவில் தூத்துக்குடியில் இயங்கி வரும் இந்திய கடலோர காவல்படை கப்பல்‘வஜ்ரா’ சிறந்த கப்பலாகத் தேர்வானது.
இதேபோல், 2023-ம் ஆண்டில் தடையற்ற வான்வழிப் பாதுகாப்பு வழங்கியதற்காக, சென்னையைச் சேர்ந்த 744ஸ்குவாட்ரானுக்கு, சிறந்த விமானப்பிரிவுக்கான கோப்பை வழங்கப்பட்டது. சிறந்த கரையோரப் பிரிவுக்கான கோப்பையை மண்டபம் இந்திய கடலோரகாவல்படை நிலையம் வென்றது. கப்பல் பராமரிப்புத் துறை சிறந்த ஆதரவுப் பிரிவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில், பிராந்திய தளபதி ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டியதுடன், கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்துக் கடலோர பாதுகாப்பு பிரிவுகளையும் உயர்மட்ட செயல்பாட்டு நிலையில் வைத்திருக்க ஆவண செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். பிராந்தியத் தளபதி கடலோரக் காவல் துறையில் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மிக உயர்ந்த உடற்தகுதி மற்றும் தொழில்முறை தரங்களைப் பேணுமாறு கடலோரக் காவல் படையினரை அவர் ஊக்குவித்தார்.