Published : 30 Mar 2024 06:10 AM
Last Updated : 30 Mar 2024 06:10 AM

மத்திய அமைச்சரவை, தமிழக அமைச்சரவையை பார்த்தாலே தெரியும் சமூகநீதியின் இலக்கணமாக பிரதமர் மோடி திகழ்கிறார்: அண்ணாமலை புகழாரம்

வடசென்னை பாஜக வேட்பாளர் பால்கனராஜை ஆதரித்து, மாநில தலைவர் அண்ணாமலை திருவொற்றியூர் தேரடி சந்திப்பு அருகில் நேற்று பிரச்சாரம் செய்தார்.படம்: ம.பிரபு

சென்னை: வட சென்னை பாஜக வேட்பாளர் ஆர்.சி.பால்கனகராஜை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை திருவொற்றியூரில் நேற்று தெருமுனைப் பிரச்சாரம் செய்தார். ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு வந்த அண்ணாமலையின் பிரச்சார வாகனம் பழுதானதால், திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலைப் பார்த்தபடி சிறிய வேனில் நின்று பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியினர் அடுத்த 20 நாட்களுக்கு வீடு வீடாகச் சென்று பிரதமர் மோடியின் 10 ஆண்டு சாதனைகளைச் சொல்லி வாக்கு சேகரிக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பை பெற முடியும்.

பாஜக ஆட்சிக்கு வரும்போது நாட்டின் பொருளாதாரம் 11-வது இடத்தில் இருந்தது.இப்போது 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆனால், திமுக ஆட்சியில் கடந்த 33 மாதங்களில் ரூ.3.5 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் மொத்த கடன் ரூ.8.53லட்சம் கோடி. மோடி அரசு நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து வலிமையான, வளமானபாரதத்தை உருவாக்கியுள்ளது. ஆனால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போயிருக்கிறது.

பிரதமர் மோடி சமூகநீதியின் இலக்கணமாகத் திகழ்கிறார். 76 பேர் கொண்ட மத்திய அமைச்சரவையில் 11 பேர் பெண்கள், 12 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள், 27 பேர் பிற்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். திமுக அமைச்சரவையின் 35 அமைச்சர்களில் 2 பேர் பெண்கள்.

அதிலும் ஒருவர் அரசியல் கோட்டாவில் வந்தவர். 2 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள். திமுக அமைச்சர்கள் சமூக நீதியைப் பற்றிப் பேசினால் இந்த விவரத்தைச் சொல்லுங்கள். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தபெண் ஒருவரை குடியரசுத் தலைவராக ஆக்கியது பாஜக அரசுதான்.

தமிழ்நாட்டுக்கு மோடி எதுவும் செய்யவில்லை என்று பிரசாரம் செய்கிறார்கள். 45 லட்சம் விவசாயிகளுக்கு ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் ரூ.30 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. சிலிண்டருக்கு ரூ.400 மானியம் தரப்படுவதால் 40 லட்சம் பேர் பயனடைகின்றனர். பயனாளியின் வங்கிக் கணக்கில் மத்திய அரசு நேரடியாகப் பணம் செலுத்திவிடுவதால் இவர்களால் கமிஷன் அடிக்க முடியவில்லை. அதனால்தான் மத்திய அரசு தமிழகத்திற்கு எதுவுமே செய்யவில்லை என்று கூறுகின்றனர்.

நாட்டின் 2-வது ராணுவமாக கருதப்படும் மீனவர்களுக்கு தனி அமைச்சரவையை ஏற்படுத்தியது மோடிதான். மீனவர்கள் நிறைந்த இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை நாட்டுக்கு மீட்டுக் கொண்டு வந்தவர் மோடி என்று அண்ணாமலை பேசினார்.

பின்னர் தென் சென்னை பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், தென் சென்னை வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். முன்னதாக ஸ்ரீபெரும்புதூர் தமாகா வேட்பாளர் வி.என்.வேணுகோபால், திருவள்ளூர் பாஜக வேட்பாளர் பொன் பாலகணபதி ஆகியோரை ஆதரித்தும் பிரச்சாரம் செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x