Published : 30 Mar 2024 06:20 AM
Last Updated : 30 Mar 2024 06:20 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களவை தொகுதி யில் நிறைவேறாத திட்டங்கள், எதிர்பார்க்கும் திட்டங்கள் என்று ஏராள மான எதிர்பார்ப்புகளுடன் மக்கள் காத்திருக்கிறார்கள்.
இத்தொகுதியில் ராதாபுரம், நாங்குநேரி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், ஆலங்குளம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகள் இடம்பெற்று ள்ளன. தற்போது 8,02,293 ஆண்கள், 8,39,863 பெண்கள் என்று மொத்தம் 16,42,305 வாக்காளர்கள் உள்ளனர்.
இத்தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயம் மற்றும் பீடி தொழில் பிரதானமாக உள்ளது. பீடித்தொழில் முற்றிலும் அழிவு நிலைக்கு வந்துவிட்டது. 7.5 லட்சம் பீடி தொழிலாளர்கள் இருந்த நிலையில், தற்போது 2.5 லட்சம் தொழிலாளர்கள் மட்டுமே இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். பீடி தொழிலாளர் நலனுக்காக மாவட்டத்தில் 11 மருத்துவமனைகள் மத்திய அரசின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை முழுமையாக செயல்படவில்லை.
புலம்பெயரும் தொழிலாளர்கள்: மாவட்டத்தில் தொழிலை முன்னேற்றுவ தற்காக கங்கைகொண்டான் தொழிற் பேட்டை, நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம், பேட்டை, வள்ளியூரில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டைகள் தொடங்கப்பட்டும் இன்றளவும் அவை பெயரளவுக்கே செயல்படுகின்றன. தொழில் வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியிருப்பதால் இங்கிருந்து பெரும்பாலானோர் கோவை, திருப்பூர், சென்னை, மும்பை, பெங்களூரு என பல்வேறு பகுதிகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர்.
மகேந்திர கிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உந்தும வளாகம், குலசேகரன்பட்டினத்தில் அமைய வுள்ள ராக்கெட் ஏவுதளம் ஆகியவை தொடர்புடைய ஆலைகளை, நாங்குநேரி தொழில்நுட்ப பூங்காவில் அமைத்தால் இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.
மாசுபடும் தாமிரபரணி: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு குடிநீருக்கு ஆதாரமாகவும், 80 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதியும் ஏற்படுத்தி தரும் தாமிரபரணி ஆறு மாசுபடுத்தப்பட்டுள்ளது. நதியை சுத்தப்படுத்த வேண்டும் என்று வாக்காளர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரியை பல்கலைக்கழகமாக உயர்த்த வேண்டும் என்பது சித்த மருத்துவர்களின் கோரிக்கையாகும் .
பின்தங்கிய சுற்றுலா: பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு போன்ற அணைக்கட்டுகளும், மாஞ்சோலை தேயிலை தோட்டமும், அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி , பாணதீர்த்த அருவி, பாபநாசம் கோயில், அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் சொரிமுத்து அய்யனார் கோயில் என சுற்றுலா தலங்கள் இத்தொகுதியில் இருந்தாலும், சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் பின்தங்கியுள்ளன.
கடலரிப்பால் பாதிப்பு: கடந்த சில ஆண்டுகளாக இத்தொகுதியில் உள்ல 9 மீனவர் கிராமங்களும் கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு தூண்டில் வளைவுகளை அமைக்க வேண்டும் என்பது மீனவர்களின் தொடர் கோரிக்கையாகும். திருநெல்வேலி -ஆலங்குளம் -சுரண்டை -சங்கரன்கோவில் ரயில் பாதை திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பில் முன்னுரிமை: இந்தியாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கடந்த 2016 -ம் ஆண்டிலிருந்து இதுவரை உள்ளூர் மக்களுக்கு எந்தவிதமான பணியிடங்களும் வழங்கப்படவில்லை. எனவே உள்ளூர் மக்களுக்கு உடனடியாக வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும் இதற்கான தேர்வு கூடங்குளத்தில் நடத்தப்பட வேண்டும் என்பதும் இந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
இந்தியாவிலேயே அதிக காற்றாலை மின்சாரம் ராதாபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே இங்கு உற்பத்தி செய்யும் காற்றாலை மின்சாரத்தை எடுத்துச் செல்லும் மின்பாதைக் கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை இங்கு நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. இவ்வாறு ஏராளமான கோரிக்கை களுடன் திருநெல்வேலி தொகுதி மக்கள் காத்திருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT