“துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள...” - சினிமா வசனம் பேசி விஜய பிரபாகரன் வாக்கு சேகரிப்பு

“துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள...” - சினிமா வசனம் பேசி விஜய பிரபாகரன் வாக்கு சேகரிப்பு
Updated on
1 min read

விருதுநகர்: ''துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள வாக்கு மாறமாட்டேன்'' என சினிமா வசனம் பேசி விருதுநகரில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் வாக்கு சேகரித்தார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் விருதுநகரில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை வகித்து, அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை சால்வை அணிவித்து அறிமுகம் செய்துவைத்தார்.

இக்கூட்டத்தில் வேட்பாளர் விஜய பிரபாகரன் பேசுகையில், ''கேப்டன் இறந்து 100 நாள் ஆகவில்லை. அதற்குள் வாழ்க்கையில் பெரும் பயணத்தைத் தொடங்கிவிட்டேன். இந்த பயணம் வெற்றிப் பயணமாக இருக்க வேண்டும். கேப்டனை கருப்பு எம்.ஜி.ஆர். என அழைப்பது ஏன் என இப்போதுதான் புரிகிறது. அதிமுக உடனான இக்கூட்டணி வெற்றிக் கூட்டணி. தாய்மார்களிடம் உங்கள் மகனாகவும், இளைஞர்களிடம் உங்கள் சகோதரனாகவும் வாக்கு கேட்கிறேன்.

வெற்றி பெற்றதும் உங்களை குறைகளைப் போக்க சிங்கம்போல் நாடாளுமன்றத்தில் கர்ஜிப்பேன். மக்களுக்கான என்னை முழுமையாக அர்ப்பணித்துவிட்டேன். பெற்றோர் கனவை நிறைவேற்றுங்கள். அவர்கள் சொல்வதை கேளுங்கள். ஏனெனில் தந்தையை இழந்த என்னைப் போன்றவர்களுக்குத்தான் அவர்களது அருமை தெரியும். புலி பதுங்குவது பாய்வதற்காகத்தான். டெல்லியில் சிவகாசி பட்டாசு சத்தம் ஒலிக்க வேண்டும். பட்டாசுத் தொழிலாளர்களுக்கான தேவைகளை பூர்த்திசெய்வேன். துளசி வாசம் மாறினாலும் தவசி புள்ள வாக்கு மாற மாட்டேன்'' என்று கூறினார்.

அதையடுத்து, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில், ''எய்ம்ஸ் மருத்துவமனை, விமான நிலையம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான அனைத்து வளர்ச்சிப் பணிகளும் விஜய பிரபாகரன் கையில்தான் உள்ளது. 38 எம்.பி.க்களை வைத்துள்ள திமுக இதுவரை எதுவும் செய்யவில்லை. அதிமுக உழைக்கும். எனவே, அதிக வாக்கு வித்தியாசத்தில் விஜய பிரபாகரனை நாம் வெற்றிபெறச் செய்ய வேண்டும்'' என்று பேசினார்.

இக்கூட்டத்தில், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ராஜன்செல்லப்பா, அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in