Published : 29 Mar 2024 04:09 PM
Last Updated : 29 Mar 2024 04:09 PM

“காசுக்கு வாக்கு வாங்கும் நிலை வந்தால் விவசாயம் பார்க்க சென்றுவிடுவோம்” - சீமான் @ தென்காசி

தென்காசி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் செய்தார்.

தென்காசி: "ரூ.100 கோடி, ரூ.150 கோடி என செலவழித்து, வாக்குக்கு காசு கொடுத்து, உங்களது வாக்குகளை காசு கொடுத்து வாங்கும் நிலையில் நாம் தமிழர் கட்சி இல்லை. அப்படிப்பட்ட அரசியல் செய்ய வேண்டிய நிலை எங்களுக்கு வந்தால், இந்த வேலையை விட்டுவிட்டு வேளாண்மை செய்ய சென்றுவிடுவோம்" என்று தென்காசியில் பிரச்சாரம் மேற்கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்யிடும் வேட்பாளர் இசை மதிவாணனை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது சீமான் பேசியது: "நூறு கோடி, 150 கோடி என செலவழித்து, வாக்குக்கு காசு கொடுத்து, உங்களது வாக்கை காசுக் கொடுத்து வாங்கும் நிலையில், நாம் தமிழர் கட்சி இல்லை. அப்படிப்பட்ட அரசியல் செய்ய வேண்டிய நிலை எங்களுக்கு வந்தால், இந்த வேலையை விட்டுவிட்டு வேளாண்மை செய்ய சென்றுவிடுவோம். இதை தொடர வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

ஒரு துண்டறிக்கை அடித்துக் கொள்ள, ஒரு பதாகை அடித்துக் கொள்ள, ஒரு கொடி அச்சிட, எரிபொருள் நிரப்பிக்கொள்ள, தங்கும் விடுதிகளுக்குக் கூட பணம் கொடுக்க முடியாத வசதியற்றவர்கள் நாம் தமிழர் கட்சியினர். நாங்கள் எப்படி இந்த ஜனநாயகத்தில் கொழுத்துப் பெருத்த பல ஆண்டுகாலம் அதிகாரத்தை அனுபவித்த கட்சிகளுடன் மோதுவது, அவர்களை முட்டித் தகர்த்து வெல்வது என்பதை வாக்காளர்களாகிய நீங்கள் ஆழந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இதுவரை அதிகாரத்தில் இருந்த அரசியல் கட்சிகள் இதுவரை செய்யாத ஒரு நன்மையை அடுத்து வருகிற காலத்தில் செய்வார்கள் என்பதை வாக்காளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இரண்டு ஏக்கர் நிலத்தில் விளைந்த பயிர்களை ஒரே நாளில் அறுத்து முடித்த விவசாய குடும்பத்தில் பிறந்தவன் நான். ஆனால், இன்று ஒரு ஏக்கர் நிலத்தில் விளைந்த கதிரை என் தாய் ஒரு வாரம் அறுக்கிறார். தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய் பறிக்க ஆட்கள் இல்லாத நிலை உருவாகி உள்ளது. வேளாண்மையை விட்டு விவசாயிகள் வெளியேறுகிற நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்" என்று சீமான் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x