“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை தேர்தல் நேரத்தில் சிறையில் அடைக்கலாமா?” - ப.சிதம்பரம்

சிங்கம்புணரியில் இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
சிங்கம்புணரியில் இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
Updated on
1 min read

சிங்கம்புணரி: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வரை தேர்தல் சமயத்தில் சிறையில் அடைக்கலாமா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது: நாடு இக்கட்டான நிலையில் உள்ளது. வடமாநிலங்களில் வெற்றிபெற்று தன்னிச்சையாக அமைக்கப்பட்ட ஆட்சி, தற் போது சர்வாதிகார ஆட்சியாக மாறியுள்ளது. இந்த ஆட்சியில் பேச்சு, எழுத்துரிமை போன்றவை பறிக்கப்படும்.

தற்போது மாநில முதல்வரையே கைது செய்யும் அளவுக்கு சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை தேர்தல் சமயத்தில் சிறையில் அடைக்கின்றனர். இது ஜனநாயக ஆட்சியா? சர்வாதிகார ஆட்சியா? இதேநிலை தொடர்ந்தால் ஒரு கட்சி, ஒரு தலைவர் தான் இருப்பார். இது ஜனநாயகத்துக்கு வந்த பேராபத்து. இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இந்தத் தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது கிடையாது. ஜனநாயகம் பிழைக்குமா? செத்துப்போகுமா? அதற்கு வாழ்வா? சாவா ? அரசியல் சாசனம் இருக் குமா? இருக்காதா? என கேள்வி எழுந்துள்ளது. இதற்கு நாம் உரக்கப் பதில் சொல்ல வேண்டும். விலைவாசி உயர்வு, வேலை யின்மை அதிகரித்துள்ளன.வேலை இல்லாதோரில் 83 சதவீதம் இளைஞர்கள், 5 ஆண்டுகளில் வேலையின்மை 2 மடங்காக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு இந்தியர் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடு வோம் என்றனர். ஆனால் 15 காசுகூட போடவில்லை.

ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.40, டீசல் ரூ.35. விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்று சொன்னார்கள். அதைச் செய்யவில்லை. ரூ.410-க்கு விற்ற எரிவாயு சிலிண்டர் தற்போது ரூ.1,130-ஆக உயர்ந்துள்ளது. திடீரென ரூ.100 குறைத்துள்ளனர். அதையும் உயர்த்த மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்? அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் பேட்டி ஒன்றில் ‘விலைவாசி, வேலை வாய்ப்பின்மையை தீர்ப்பதற்கு அரசை நம்பினால் தப்பு, அதைத் தீர்க்கும் சக்தி எல்லாம் அரசுக்குக் கிடையாது’’ என்று சொல்கிறார்.

இது கையாலாகாத, திறமையில்லாத, செயலிழந்த அரசு. உங்களால் முடியவில்லை என்றால் ஏன் நாற்காலியில் அமர்ந்திருக்கிறீர்கள். விலகினால் திறமையானவர்கள் அமர்ந்து சரி செய்வார்கள். நாட்டில் ஒரு கட்சி, ஒரு தலைவர் மட்டுமே இருப்பதற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ். முயன்று வருகின்றன. வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசு மு.க.ஸ்டாலின் அரசு. வாக்குறுதிகளை மீறும் அரசு மோடி அரசு. இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in