

ராமநாதபுரம்: முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் சேர்த்து ரூ.9.79 கோடி சொத்துகள் இருப்பதாக தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியில் சுயேச்சை வேட்பாளராக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 25-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது தனது சொத்து மதிப்பு உள்ளிட்ட பிரமாணப் பத்திரம் சமர்ப்பிக்கவில்லை. இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் கடைசி நாளான நேற்று முன்தினம் சொத்து மதிப்பு உள்ளிட்ட பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தார்.
அதில், தனது பெயரில் அசையும் சொத்துகள் ரூ.1 கோடியே 11 லட்சத்து 33 ஆயிரத்து 138, அசையா சொத்துகள் ரூ.7 கோடியே 80 லட்சத்து 99 ஆயிரத்து 707, மறைந்த தனது மனைவி பெயரில் அசையும் சொத்து ரூ.10 லட்சத்து 17 ஆயிரத்து 694 மற்றும் அசையா சொத்துகள் ரூ.76 ஆயிரத்து 99 ஆயிரத்து 838 என மொத்தம் ரூ.9 கோடியே 79 லட்சத்து 60 ஆயிரத்து 377 மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தனது பெயரில் ரூ.1 கோடியே 52 லட்சத்து 85 ஆயிரத்து 226 கடன் உள்ளது எனவும், தன் மீது காவல் துறையில் 5 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது எனவும், எந்த வழக்கிலும் தண்டனை வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.