

திருப்பூர்: மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிலுள்ள சுங்கச் சாவடிகள் அகற்றப்படும் என்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம் வெள்ள கோவிலில் நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஈரோடு மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து அவர் பேசும் போது, “இன்றைக்கு இந்தியாவை ஆளும் பாஜகவால் மக்கள் மதம், ஜாதியால் பிரித்து வைக்கப் பட்டுள்ளனர்.
பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களிடையே ஒற்றுமை இல்லை. மணிப்பூர் மாநிலம் கலவரத்தால் கொழுந்து விட்டு எரிகிறது. அங்கு பிரதமர் மோடி ஒரு முறை கூட செல்லவில்லை. இயற்கை சீற்றங்களால் தமிழக மக்கள் பாதிக்கப்பட்டிருந்த போதும் கூட வரவில்லை.
ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும் அடிக்கடி வருகிறார். டெல்லி விவசாயிகள் போராட்டத்தை பாஜக கண்டுகொள்ளவில்லை. விவசாயிகள், சிறுபான்மையினர், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதானி, அம்பானிகளுக்கு வேண்டப்பட்ட அரசாக பாஜக அரசு உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தனது பிரச்சாரத்தில் மோடியை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை.
திமுக அங்கம் வகிக்கும் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் காஸ், சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகள் அனைத்தும் அகற்றப்படும். தென்னை விவசாயிகளின் கோரிக்கையான கொப் பரைக்கு அடிப்படை ஆதார விலை வழங்கப்படும்” என்றார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத் தலைவரும், திமுக தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்ம நாபன் உட்பட பலர் பங்கேற்றனர்.