Published : 29 Mar 2024 05:25 AM
Last Updated : 29 Mar 2024 05:25 AM

புதிய தலைமைச் செயலக கட்டுமான முறைகேடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதி

சென்னை: புதிய தலைமைச் செயலக கட்டுமான முறைகேடு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்துள்ள உயர் நீதிமன்றம், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த வேண்டுமென அரசை நிர்பந்திக்க முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006-11 திமுக ஆட்சிகாலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி, கடந்த அதிமுக ஆட்சியில் ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிஆர்.ரகுபதி தலைமையில் ஒருநபர்ஆணையம் அமைத்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, அமைச்சர் துரைமுருகன், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்தவழக்கை விசாரித்த உயர் நீதிமன்றதனி நீதிபதி, ஒருநபர் ஆணையத்தைக் கலைத்தும், அந்த ஆணையம் சேகரித்த ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்கவும், அந்த ஆதாரங்களில் முகாந்திரம் இருந்தால் அதுதொடர்பாக விசாரணை நடத்தி லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் அடிப்படையில் இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணை மற்றும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பின்னர் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இந்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் முதல்வர் மற்றும் அமைச்சருக்கு எதிரான இந்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதிக்கக் கூடாது எனக்கோரி, அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்தன் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் மற்றும் அமைச்சர் தரப்பில் ஆஜரான திமுக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், ‘‘இந்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெறுவது என அரசு முடிவெடுத்து விட்ட நிலையில், அதை ஏற்காமல்நீதிமன்றம் தாமதம் செய்ய முடியாது. மேலும், இந்த வழக்கில் இடையீட்டு மனுதாரராக ஜெயவர்தனை அனுமதிக்கக் கூடாது’’ என வாதிட் டார்.

அதேபோல அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர், ‘‘ஏற்கெனவே தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டதை கலைத்து உயர் நீதிமன்றம்தான் உத்தரவிட்டது. அதை இந்த அரசு ஏற்றுக்கொள்வதால் இந்த மேல்முறையீட்டு வழக்கையும் வாபஸ் பெற முடிவு செய்துள்ளது. இந்த வழக்கில் தன்னைஇணைத்துக்கொள்ள ஜெயவர் தனுக்கு எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லை. அவர் அளித்த புகார் ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்டுவிட்டது’’ என வாதிட்டனர்.

ஜெயவர்தன் தரப்பில் ஆஜரானமூத்த வழக்கறிஞர்கள் வி.ராகவாச்சாரி, வள்ளியப்பன் ஆகியோர் ‘‘இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக விசாரிக்கவில்லை. முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான இந்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெறுவதிலேயே தமிழக அரசு அதீத ஆர்வம் காட்டி வருகிறது. இந்த வழக்கில் தங்களது தரப்பு வாதத்தை கேட்ட பிறகே நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்’’ என்றனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தள்ளி வைத்திருந்தனர். இந்நிலையில், நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், ‘‘இந்த மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெறுவதென லஞ்ச ஒழிப்புத்துறை முடிவுசெய்துள்ள நிலையில், வழக்கைதொடர்ந்து நடத்த வேண்டுமென அரசை நீதிமன்றம் நிர்பந்திக்கமுடியாது. எனவே மேல்முறையீட்டு வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து தள்ளுபடி செய்கிறோம். அதேபோல வழக்கு வாபஸ் பெறப்படுவதால் இடையீட்டு மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை’’ எனக்கூறி இடையீட்டு மனுவை முடித்து வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x