

சென்னை: சென்னை முகப்பேர் ஏரிக்கரைத் திட்டம் கனகராஜ் என்பவர் தனக்குசொந்தமான 5 வீடுகளை ராமலிங்கம்என்பவருக்கு குத்தகைக்கு விட்டுள்ளார். ஆனால் ராமலிங்கம், அந்த வீடுகளின் உரிமையாளர் போல போலியாக ஆவணங்களைத் தயாரித்து கனகராஜுக்குத் தெரியாமல் வங்கியில் அடமானம் வைத்து பெரும் தொகையை கடனாகப் பெற்று மோசடி செய்துள்ளார்.
இதுதொடர்பாக கனகராஜ் அளித்த புகாரின்பேரில் கைதானராமலிங்கத்துக்கு உயர் நீதிமன்றம்நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக்கோரி கனகராஜ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ், ‘‘அடுத்தவர்களுக்கு சொந்தமான வீடுகளை குத்தகைக்கு எடுக்கும் மோசடிப் பேர்வழிகள் பலர், வீட்டின் உரிமையாளருக்குத் தெரியாமல் வங்கியில் அடமானம் வைத்து கடன் பெறுகின்றனர். இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையர் எல்லைக்குள் 67 வீட்டு உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் 40 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ.7 கோடி மேல் மோசடி நடந்துள்ளது.
இதேபோல தாம்பரம் காவல்ஆணையர் எல்லைக்குள் ரூ.13கோடி மோசடி செய்யப்பட்டுள்ள தாக 9 குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அங்கு 342 வீட்டு உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ள னர். ஆவடி காவல் ஆணையர் எல்லைக்குள் 20 பேரிடம் ரூ.2 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாக 4வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளன. இதுதவிர ரூ.41 கோடி மோசடி தொடர்பாக 4 வழக்குகளை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்துள்ளனர்’’ என அறிக்கைதாக்கல் செய்தார்.
அதையடுத்து நீதிபதி, ‘‘போலீஸார் தாக்கல் செய்துள்ள அறிக்கையைப் பார்த்தால் ரூ.65 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளது. இந்தகும்பல் அடுத்தவர்களின் சொத்தைஅடமானமாக வைத்து நூதன முறையில் வங்கியில் கோடிக்கணக்கில் கடன் பெற்றுவிட்டு பின்னர் கம்பி நீட்டி விடுகின்றனர். அதன்பிறகு சட்டரீதியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டால் சிவில் பிரச்சினை எனக்கூறி வழக்கை திசை திருப்புகின்றனர்.
2013-ம் ஆண்டு பதிவான மோசடி வழக்கில்கூட போலீஸார் இன்னும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாதது துரதிருஷ்டவசமானது. இதுபோன்ற மோசடி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்தான் அதிகமாக நடந்துள்ளன. எனவே இந்தமோசடி தொடர்பாக பொதுமக்கள் விழிப்புடன் இருக்க பத்திரிகைகள் வாயிலாக அரசு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இந்த வழக்கில் தமிழக டிஜிபி.யை எதிர்மனுதாரராக சேர்க்கிறேன். அவர், இதுபோன்ற நூதனமோசடிகளை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் உள்ள ராமலிங்கம் பணத்தை திருப்பி செலுத்த 6 மாதம் அவகாசம் கோரியுள்ளதால் விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைக்கிறேன்’’ என உத்தர விட்டுள்ளார்.