Published : 19 Feb 2018 08:43 AM
Last Updated : 19 Feb 2018 08:43 AM

திடீரென ஒரு இயக்கத்தை ஆரம்பித்து ஆட்சியைப் பிடிக்க முடியாது: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி

திடீரென ஒரு இயக்கத்தை ஆரம்பித்து அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்தார்.

இதுகுறித்து சிவகாசியில் நேற்று தனது இல்லத்தில் அவர் அளித்த பேட்டி: முதல்வர் கே. பழனிசாமியின் ஆட்சியில் தமிழகத்தில் எங்கும் வன்முறை கிடையாது. வகுப்புவாதம், இனவாதம், மதவாதம் கிடையாது. சிறு பிரச்சினை ஏற்பட்டாலும், உடனடியாக காவல்துறையால் அடக்கப்படுகிறது. ரவுடிகள் பிறந்தநாள் கொண்டாடுவது தெரிந்ததும், அத்தனை ரவுடிகளையும் வளைத்து பிடித்துள்ளனர்.

தமிழகம் அமைதிப் பூங்காவாக இல்லை என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியது ஏற்கத்தக்கதல்ல. நடைமுறைக்கு ஒவ்வாத கருத்து.

கமல் ராமேசுவரம் கடலுக்குச் செல்கிறார். அவர் மூழ்கிவிடக் கூடாது. நீந்திவந்த பின்னர்தான் தெரியும். அரசியல் என்பது எவ்வளவு கரடுமுரடான பாதை என்பது அனுபவத்தில் தான் தெரியும். சினிமாவில் எழுதிக் கொடுக்கும் வசனத்தைப் பேசி, இயக்குநர் சொல்வதைப் போல நடித்து அதில் பேர் வாங்கி விடலாம்.

ஆனால், அரசியல் அப்படி கிடையாது. அவர்களே செயலாற்ற வேண்டும், தொண்டு செய்ய வேண்டும். அப்போதுதான் ஜெயிக்க முடியும். அரசியல் எவ்வளவு கடினம் என்பதை, இனி வருபவர்கள் உணர்ந்து கொள்வார்கள்.

எவ்வித முன் அனுபவமும் இல்லாமல், திடீரென ஒரு இயக்கத்தை ஆரம்பித்து அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க முடியாது.

மக்களிடம் விழிப்புணர்வு அதிகமாக உள்ளது. யாரையும் ஏமாற்ற முடியாது. மக்கள் சினிமாவை சினிமாவாகத்தான் பார்ப்பார்கள், அரசியலை அரசியலாகத்தான் பார்ப்பார்கள்.

எப்படிப் பார்க்கப் போகிறார்கள் என்பது கொஞ்ச நாள் கழித்துத் தெரியும். கமல் படம் ஓடுமா என்பது பிறகுதான் தெரியும். ரஜினியும் கமலும் நண்பர்கள், நடிகர்கள். அதனால் சந்தித்துள்ளார்கள். அதில் எந்த தவறும் இல்லை.

ஒரு நாட்டின் பிரதமர், தமிழகத்தில் நல்ல இயக்கம் ஆட்சி செய்கிறது, இந்த இயக்கத்தில் பிரச்சினை இருக்கக் கூடாது எனக்கருதி ஒன்றாக இருக்குமாறு கூறியிருக்கலாம். அப்படிக் கூறுவதிலும் தவறும் இல்லை. அதைக் கேட்பதிலும் தவறு இல்லை. மற்றபடி, அதிமுகவில் அவரது ஆதிக்கம் ஏதும் கிடையாது. பிரதமர் தனது ஆலோசனைகளையும் கருத்துகளையும் சொல்லியிருப்பார். அதைக் கேட்பது ஒன்றும் தவறு கிடையாது. அந்த அடிப்படையில்தான் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியிருப்பார். முதல்வரும் துணை முதல்வரும் இணைந்துதான் ஆட்சியை சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அது எங்களைப் போன்றவர்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால் இந்த இயக்கத்தில் யாரும் ஊடுருவி அசைக்கவோ, அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது.

பாஜகவுடன் கூட்டணி குறித்து முதல்வரும், துணை முதல்வரும்தான் முடிவு செய்வார்கள். உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. தொண்டர்களும் தயாராக உள்ளார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x