

திருவள்ளூர்/ செங்கல்பட்டு: மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருமழிசையில் மனித சங்கிலி இயக்கமும், திருவள்ளூர், செங்கையில் தெருக்கூத்து நிகழ்ச்சிகளும் நேற்று நடைபெற்றன.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே திருமழிசையில், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் நேற்று மக்களவை தேர்தலில், நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி இயக்கம் நடைபெற்றது.
பூந்தமல்லி நகராட்சி சார்பில் நடைபெற்ற இந்த மனித சங்கிலி இயக்கத்தில் ஆட்சியர் பிரபுசங்கர், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், திருவள்ளூர் கோட்டாட்சியர் கற்பகம், பூந்தமல்லி வட்டாட்சியர் கோவிந்தராஜன், பூந்தமல்லி நகராட்சி ஆணையர் லதா மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.
திருவள்ளூர் பேருந்து நிலையம் எதிரில் மக்களவை தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தப்பாட்டம் மற்றும் தெருக்கூத்து நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இந்நிகழ்வில் மகளிர்திட்ட இயக்குநர் செல்வராணி, திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுபாஷினி, வட்டாட்சியர் வாசு தேவன் பங்கேற்றனர். செங்கல்பட்டில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறையின் சார்பில் தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.செங்கல்பட்டில் தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.