

மதுரை: மதுரை என்று சொன்னாலே அதிமுகவின் எஃகு கோட்டை. இந்தக் கோட்டையில் எதிரிகள் யாரும் நுழைய முடியாது, என மதுரையில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் கே.பழனிசாமி தெரிவித்தார்.
மதுரை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனை ஆதரித்து பழங்காநத்தத்தில் நேற்றிரவு நடந்த பொதுக் கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது: மதுரை என்று சொன்னாலே அதிமுக-வின் எஃகு கோட்டை. இந்தக் கோட்டையில் எதிரிகள் யாரும் நுழைய முடியாது. மதுரைக்கு ‘எய்ம்ஸ்’ மருத்துவ மனையை கொண்டு வந்தது அதிமுக. அதை நிறைவேற்ற வேண்டிய கடமை திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.களுக்கு இருந்தது. இத்தொகுதி எம்பியாக இருந்த சு.வெங்கடேசன், உட்பட 38 எம்.பி.க்களும் இந்த திட்டத்துக்காக என்ன போராட்டம் செய்தார்கள்.
மக்களவையில் பேசி அழுத்தம் கொடுத்தால் இந்த திட்டம் வந்திருக்கும். இதே அதிமுக எம்பிக்கள் இருந்திருந்தால் மக்களவையையே முடக்கி இருப்போம். அதனால், இந்த முறை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையைக் கொண்டு வர அதிமுகவுக்கு வாய்ப்புக் கொடுங்கள். திமுகவினர் ஆட்சி, அதிகாரத்துக்கு வர வேண்டுமென்றால் எந்த நிலைக்கும் செல்வார்கள். அதிமுக ஆட்சியில் ‘கோ பேக் மோடி’ என்றார்கள். திமுக ஆட்சியில் தற்போது ‘வெல்கம் மோடி’ என்று ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கிறார்கள்.
இப்படி இரட்டைவேடம் போடும் ஒரு கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் உள்ளார். வெளியே எதிர்க்கிற மாதிரி வீர வசனம் பேசுவார்கள். உள்ளே சென்றால் மோடியிடம் சரணாகதி அடைந்து விடுகிறார்கள். அதனால், எய்ம்ஸ் போன்று தமிழகத்தில் கிடப்பில் கிடக்கும் திட்டங்களை நிறைவேற்ற அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி. உதய குமார், ராஜேந்திர பாலாஜி, நத்தம் விஸ்வநாதன், எம்.எல்.ஏ-க்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.