

கோவை: நாடாளுமன்றத்தில் கோவை தொகுதி மக்களின் குரலாக எனது குரல் ஒலிக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் கிராந்திகுமார் பாடியிடம் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், முன்னாள் எம்எல்ஏ சின்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக, கோனியம்மன் கோயிலில் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார்.
கோயில் வளாகத்தில் புதுமண தம்பதிகளான கோவைப்புதூரை சேர்ந்த ரவி - தேவிகா தம்பதி அண்ணாமலையிடம் ஆசி பெற்றனர். பின்னர், 1989-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகி வீர கணேஷின் அம்மாவிடம் அண்ணாமலை ஆசி பெற்றார். இதைத் தொடர்ந்து, தொண்டர்கள் புடைசூழ, அவிநாசி சாலை அண்ணா சிலை அருகில் இருந்து ஊர்வலமாக சென்று மனு தாக்கல் செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடாளுமன்றத்தில் கோவை தொகுதி மக்களின் குரலாக எனது குரல் ஒலிக்கும். கோவை மக்களுக்கு உறுதுணையாக இருப்போம். வளர்ச்சியை வேகப்படுத்துவோம். தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிமுக வேட்பாளர் சிங்கை ஜி.ராமச் சந்திரனின் தந்தை குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. அது எனது கருத்து. வளர்ச்சியை தடுக்கக் கூடிய ஆதிக்க சக்திகளோடு மட்டும் தான் எங்களது போட்டி இருக்கும். கோவை பிரச்சினைகள் குறித்து தற்போதைய எம்பி, நாடாளுமன்றத்தில் எத்தனை முறை பேசியிருக்கிறார்?
கடந்த காலங்களில் பருத்திக்கு இறக்குமதி வரி வேண்டுமென ஜவுளித்தொழில்துறையினர் கேட்டதால் வரி விதிக்கப்பட்டது. காட்டன் கார்ப்ப ரேஷன் ஆஃப் இந்தியாவை கலைத்தால் பருத்தி விலை குறையும் என்கின்றனர். அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு மீதமுள்ள 87 ஏக்கர் நிலத்தை ஆர்ஜிதம் செய்து வழங்க தமிழக அரசு தாமதம் செய்கிறது. மத்திய விமான போக்கு வரத்து அமைச்சர், மூன்று முறை தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.
வானதி சீனிவாசன் பலமுறை சென்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை அழைத்து வந்து தொழில் துறையினருடன் கூட்டம் நடத்தி, அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவியுள்ளார். மூன்று முறை விமான போக்கு வரத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். கோவை வளரக்கூடாது என மாநில அரசு கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறது. 2022 தீபாவளிக்கு முன் நடந்த தற்கொலை குண்டு வெடிப்புக்கு பின் பிறகு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு என குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருந்த ஒரு குழுவை உடைத்துள்ளனர்.
கோவை மக்கள் இதை மறக்க மாட்டார்கள். 1998-ம் ஆண்டு நடந்த கோவை குண்டு வெடிப்பு பிரிவினை வாதத்தை ஏற்படுத்தாது. இஸ்லாமியர்களும், அவர்களின் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். தீவிரவாதிக்கு மதம் கிடையாது. தீவிரவாதிகள் மக்களை கொலை செய்ய வருபவர்கள். கோவை மக்களவை தொகுதி மக்கள் 60% எனக்கு வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.