

சென்னை: அமலாக்கத் துறை வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரிய மனு மீது இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில், இந்த வழக்கில் மீண்டும் வாதிட அனுமதி கோரி அவரது தரப்பில்கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்துள்ள வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கெனவே சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
நீதிபதி எஸ்.அல்லி முன்பு இந்த மனு மீதான விசாரணை நடந்தது. செந்தில் பாலாஜி தரப்பில் டெல்லி மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரமும், அமலாக்கத் துறை தரப்பில் மத்திய அரசின் கூடுதல்சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன் மற்றும் அரசு சிறப்புவழக்கறிஞர் என்.ரமேஷ் ஆகியோரும் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இந்த வழக்கில் மார்ச் 28-ம் தேதி (இன்று) தீர்ப்பு அளிக்கப்படும் என்று நீதிபதி அல்லி ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கில் மீண்டும் வாதிட அனுமதி கோரி செந்தில் பாலாஜி தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், ‘இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை வழங்குமாறு வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அந்த ஆவணங்கள் இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை. அவை கிடைத்தபிறகு, அதன் அடிப்படையில் இந்தவழக்கில் வாதிட அனுமதிக்க வேண்டும். அவ்வாறு அனுமதிக்காவிட்டால், எங்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த மனு இன்று விசாரணைக்கு வர உள்ளது.